5 பேர் மீது வழக்கு
5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சிவகாசி,
சிவகாசி-விருதுநகர் மெயின் ரோட்டில் திருத்தங்கல் எஸ்.ஆர்.என். அரசு பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தலைமையாசிரியர் கணேஷ்பாண்டியன் திருத்தங்கல் போலீசில் அளித்துள்ள புகாரில், இரவு நேரத்தில் பள்ளியின் பின்புறம் உள்ள வழியாக பள்ளிக்குள் நுழைந்த 5 பேர் பள்ளியில் இருந்த மின்சாதன பொருட்கள், மேஜை, நாற்காலிகள், குடிநீர் குழாய்கள் ஆகியவற்றை அடித்து உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. புகாரை பெற்ற திருத்தங்கல் போலீசார் விசாரணை நடத்தி மாதவன் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள். எஸ்.ஆர்.என். பள்ளியின் சுற்றுச்சுவர் சேதமடைந்து காணப்படுவதால் இரவு நேரங்களில் அந்த பள்ளியில் சமூக விரோத செயல்கள் நடக்கிறது என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்த நிலையில் தற்போது பள்ளியில் இருந்த பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இனிவரும் காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க சுற்றுச்சுவர் அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.