விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 51 பேர் மீது வழக்கு
அனுமதியின்றி மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 51 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே ஓலையூர் கிராமம் அண்ணாநகர் பஸ் நிறுத்தத்தில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை கடந்த சில நாட்களுக்கு முன்பு பயன்பாட்டிற்கு வந்தது. இந்தநிலையில் பயணியர் நிழற்குடையின் மேல்பகுதியில் திருமாவளவனின் புகைப்படத்துடன் கூடிய பெயர் பலகை ஒட்டப்பட்டு இருந்தது. இதனை மர்ம ஆசாமிகள் சேதப்படுதியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மர்ம ஆசாமிகளை கைது செய்ய வலியுறுத்தி ஆண்டிமடம்- விருத்தாசலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா சோமசுந்தரம் தலமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த நிலையில் அனுமதியின்றி மறியலில் ஈடுபட்டதாக 5 பெண்கள் உள்பட 51 பேர் மீது ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.