கர்ப்பிணியை தாக்கிய 6 பேர் மீது வழக்கு
குலசேகரம் அருகே பட்டாசு வெடிப்பதில் தகராறு: கர்ப்பிணியை தாக்கிய 6 பேர் மீது வழக்கு
குலசேகரம்,
ஆற்றூர் முள்ளுவிளையைச் சேர்ந்தவர் விஷ்ணு (வயது 32). இவருடைய மனைவி சுபலெட்சுமி. கர்ப்பிணியான சுபலெட்சுமி பிரசவத்திற்காக குலசேகரம் அருகே காவல்ஸ்தலம் செட்டித்தெருவில் உள்ள தனது தாயார் வீட்டில் வசித்து வருகிறார். இந்தநிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விஷ்ணு தனது மனைவியைப் பார்க்க சென்றுள்ளார். அப்போது, அதேபகுதியைச் சேர்ந்த ஒரு கும்பல் சுபலெட்சுமியின் வீட்டின் முன்பு பட்டாசுகளை வெடித்துள்ளனர். அப்போது, அவர்களிடம் பட்டாசு வெடிப்பது இடையூறாக இருப்பதாக சுபலெட்சுமி கூறியுள்ளார். அதனால், அந்த கும்பலை சேர்ந்தவர்கள் சுபலெட்சுமியை தகாத வார்த்தைகளால் பேசினார். இதை சுபலெட்சுமியின் கணவர் விஷ்ணு கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த கும்பல் சுபலெட்சுமியின் வீட்டிற்குள் புகுந்து அவரையும், அவரது கணவரையும் சரமாரியாக தாக்கினர். மேலும், வீட்டில் உள்ள பொருட்களையும் சேதப்படுத்தி விட்டு தப்பிச் சென்றனர். இதில் படுகாயமடைந்த சுபலெட்சுமி சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் குலசேகரம் கூடைத்தூக்கி பகுதியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன், செட்டித்தெருவைத் சேர்ந்த மணிகண்டன், ஸ்ரீனிவாசன், அரியாம்பகோட்டைச் சேர்ந்த ராகுல், சதீஷ், கான்வென்ட் பகுதியைச் சேர்ந்த போஸ் ஆகிய 6 பேர் மீது குலசேரகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.