போக்குவரத்து விதி மீறிய 697 பேர் மீது வழக்கு
தீபாவளி பண்டிகையின் போது கடலூர் மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 697 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
கடலூர்:
தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கடலூர் மாவட்டத் திலும் தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். இருப்பினும் இந்த பண்டிகையையொட்டி அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடக்காமல் தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் மேற்பார்வையில் 1500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இது தவிர தற்காலிக மற்றும் நிரந்தர சோதனைச்சாவடிகளிலும் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். கடந்த 2 நாட்களாக போலீசார் நடத்திய சோதனையில், செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டிய 38 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
697 பேர் மீது வழக்கு
அதிவேகமாக வாகனம் ஓட்டிய 11 பேர் மீதும், சீட் பெல்ட் அணியாமல் காரில் சென்ற 16 பேர் மீதும், ஹெல்மெட் அணியாமல் சென்ற 553 பேர் மீதும், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிச்சென்ற 2 பேர் மீதும், உரிமம் இல்லாமலும், இன்சூரன்ஸ் இல்லாமலும் வாகனம் ஓட்டியது என மொத்தம் 697 மோட்டார் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து அபராத தொகையும் வசூலித்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.