சாலை மறியலில் ஈடுபட்ட 71 பேர் மீது வழக்கு
வந்தவாசியில் சாலை மறியலில் ஈடுபட்ட 71 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த தூக்குவாடி கிராமத்தில் சுடுகாட்டு பாதையை பொதுமக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் இந்த சுடுகாட்டு பாதை அருகில் நிலத்தை வாங்கியவர் சுடுகாட்டுப் பாதை தன்னுடைய இடத்தில் உள்ளது என்று கூறி அதனை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக நிலத்தை வாங்கியவர்கள் தரப்பினரிடம் பொதுமக்கள் கேட்ட போது வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பொதுமக்கள் தரப்பில் பேசிய சீனிவாசன் என்பவர் வெட்டப்பட்டார்.
இதை கண்டித்தும், சீனிவாசனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் வந்தவாசி-காஞ்சீபுரம் சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் தூக்குவாடி கிராமத்தை சேர்ந்த மண்ணு (வயது 50), ஜெயபால், நந்தகோபால், தாமோதரன் உள்பட 71 பேர் மீது வந்தவாசி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.