கம்பிவேலியை அகற்றிய 8 பேர் மீது வழக்கு
தோகைமலை அருகே கம்பிவேலியை அகற்றிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தோகைமலை அருகே வடசேரி ஊராட்சி காவல்காரன்பட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 48). இவர் தனது வீட்டின் அருகே சிமெண்டு ஹாலோபிளாக் கற்கள் தயாரித்து வருகிறார். இதற்காக தங்கவேல் தனது வீட்டை சுற்றி கம்பி வேலி அமைத்து அதில் சிமெண்டு ஹாலோபிளாக் கற்கள் மற்றும் இதர பொருட்களை வைத்து விற்பனை செய்து வருகிறார். இந்தநிலையில், அதே பகுதியில் வசிக்கும் தங்கவேலின் உறவினரான வெள்ளைச்சாமிக்கும், இவருக்கும் விவசாய நிலம் சம்பந்தமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
நேற்று முன்தினம் மாலை வெள்ளைச்சாமி மற்றும் அவரது தரப்பை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் தங்கவேல் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது வெள்ளைச்சாமி இடத்தில் கம்பிவேலி அமைத்தது குறித்து தகாத வார்த்தையால் திட்டி கம்பி வேலிகளை அகற்றியுள்ளனர். மேலும் இதனை தடுக்க வந்த தங்கவேல் மற்றும் அவரது உறவினர்களுக்கு வெள்ளைச்சாமி தரப்பினர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தோகைமலை போலீசில் தங்கவேல் அளித்த புகாரின் பேரில் காவல்காரன்பட்டி பகுதியை சேர்ந்த மோகன் என்கிற முருகானந்தம், கார்த்திக், வெள்ளைச்சாமி, சூரியபாலு, விஜயா, கிருஷ்ணன், லெட்சுமி, மணி ஆகிய 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.