போக்குவரத்து விதிகளை மீறிய 88 பேர் மீது வழக்கு
கோத்தகிரி மலைப்பாதையில் நடந்த வாகன சோதனையில் போக்குவரத்து விதிகளை மீறிய 88 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கோத்தகிரி,
கோத்தகிரி மலைப்பாதையில் நடந்த வாகன சோதனையில் போக்குவரத்து விதிகளை மீறிய 88 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வாகன சோதனை
கோத்தகிரி பகுதிக்கு சமவெளி பகுதிகளில் இருந்து கட்டுமான பொருட்கள் லாரிகளில் கொண்டு வரப்படுகின்றன. இவ்வாறு வரும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட எடையை விட கூடுதல் பாரம் ஏற்றி வருகின்றன. கோத்தகிரியில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையிலான போலீசார் நேற்று கோத்தகிரி நகரின் முக்கிய சாலைகளில் வாகன சோதனை மேற்கொண்டனர். இதில் கருப்பு கூலிங் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்கள், உரிய நம்பர் பிளேட் பொருத்தாத வாகனங்கள், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி சென்ற வாகன ஓட்டிகள், ஹெல்மெட் அணியாதவர்கள், சீட் பெல்ட் அணியாதவர்கள் உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறிய 53 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
88 பேர் மீது வழக்கு
அவர்களுக்கு ரூ.6 ஆயிரத்து 900 அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல ரோந்து பணி சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் மேற்கொண்ட வாகன சோதனையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 2 மற்றும் 4 சக்கர வாகன ஓட்டிகள் 35 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களுக்கு ரூ.6 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து சமவெளி பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகளுக்கு மலைப்பாதைகளில் எவ்வாறு வாகனங்களை மிதமான வேகத்தில் இயக்க வேண்டும் எனவும்,
தாழ்வான சாலைகளில் பயணிக்கும் போது 2-வது கியரில் வாகனங்களை இயக்கி பாதுகாப்பாக செல்ல வேண்டும் என கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நேற்று ஒரே நாளில் போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகள் 88 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ரூ.13 ஆயிரத்து 400 அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.