முதல் மனைவிக்கு தெரியாமல்2-வது திருமணம் செய்த என்ஜினீயர் மீது வழக்கு
முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த என்ஜினீயர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிதம்பரம்,
சிதம்பரம் பழைய புவனகிரி ரோட்டை சேர்ந்தவர் சித்ரா (வயது 30). இவருக்கும் மாரியப்பா நகரை சேர்ந்த அருள்மொழி(32) என்பருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. அருள்மொழி சென்னையில் சிவில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.
அப்போது அருள்மொழிக்கும், அதே பகுதியை சேர்ந்த தமிழ்செல்வி என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு, அவரை அருள்மொழி 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 8 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் அருள்மொழி, தனது 2-வது மனைவியுடன் மாரியப்பா நகரில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார்.
இதுபற்றி அறிந்த சித்ரா, அருள்மொழியின் வீட்டிற்கு சென்று கேட்டுள்ளார். அப்போது அங்கிருந்த அருள்மொழி, இவருடைய தந்தை பாஸ்கரன் (55), தாய் ரஜினி (50), சகோதரர் அருள் தேவன் (34), இவருடைய மனைவி நந்தினி (30), மற்றும் தமிழ்ச்செல்வி ஆகியோர் சேர்ந்து சித்ராவை திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது குறித்து சித்ரா சிதம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் அருள்மொழி உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.