அரசு வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.7 லட்சம் மோசடி -கணவன்-மனைவி மீது வழக்கு
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.7 லட்சம் மோசடி செய்ததாக கணவன்-மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.7 லட்சம் மோசடி செய்ததாக கணவன்-மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு வேலை
மதுரை மாவட்டம் திருமங்கலம் முகமதுஷா புரத்தை சேர்ந்தவர் துரைப்பாண்டி (வயது 38). இவரது மனைவி அபர்ணாஸ்ரீ (34). பி.காம். பட்டதாரி. இவர் அரசு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது பெருங்குடியைச் சேர்ந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்து வரும் ராஜா(வயது 50). இவருடைய மனைவி கலைச்செல்வி (43) சத்துணவு மைய பொறுப்பாளர். இவர்கள் அபர்ணாஸ்ரீயிடம் பொதுப்பணித்துறையில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறினர்.
இவர்களை நம்பி கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். பணம் வாங்கிச்சென்ற ஒரு வாரத்திற்குள் திரும்பி வந்த ராஜா மற்றும் கலைச்செல்வி ஆகியோர் அரசு பணியை வாங்கி வந்துள்ளதாக கூறி ஒரு கவரை கொடுத்துள்ளனர். தற்போது உடைத்து பார்க்க கூடாது. நாங்கள் சொல்லும் போது பாருங்கள் எனக் கூறி சென்றனர். பின்னர் ஒரு மாதம் கழித்து மீண்டும் திரும்பி வந்த ராஜா அந்த போஸ்ட் கவரை வாங்கி வேறு ஒரு ஆர்டர் வரும் என கூறி சென்றுள்ளார். அதன் பின் அரசு பணிக்கான எந்த அழைப்பும் வரவில்லை.
வழக்குபதிவு
இதைதொடர்ந்து, கலைச்செல்வியிடம் அபர்ணாஸ்ரீ வேலை வேண்டாம் என கூறி பணத்தை கேட்டுள்ளார். உடனடியாக அவர்கள் ரூ.6 லட்சம் 75 ஆயிரத்திற்கு காசோலை கொடுத்துள்ளனர். வங்கியில் காசோலையை செலுத்திய போது பணம் இல்லை என திரும்பி வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மதுரை. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அவரது உத்தரவின்படி திருமங்கலம் டவுன் போலீசார் பெருங்குடியைச் சேர்ந்த ராஜா, கலைச்செல்வி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.