தனியார் பஸ் கண்டக்டரை தாக்கிய முதியவர் மீது வழக்கு
தனியார் பஸ் கண்டக்டரை தாக்கிய முதியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விழுப்புரம் அருகே உள்ள கோனூரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 38). இவர் புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் மார்க்கமாக செல்லும் தனியார் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று மாலை புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்திற்கு வழக்கம்போல் தனியார் பஸ் புறப்பட்டது. அப்போது விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலை இந்திரா நகரை சேர்ந்த சுந்தரமூர்த்தி (65) என்பவர் புதுச்சேரியில் இருந்து அந்த பஸ்சில் ஏறியுள்ளார். அவரிடம் சுரேஷ், பயணச்சீட்டு எடுக்குமாறு கூறியுள்ளார். அதற்கு அவர், நானும் பஸ் டிரைவராக இருந்தவன்தான் என சுரேஷிடம் பிரச்சினை செய்து பயணச்சீட்டு எடுக்க மறுத்து பின்னர் சிறிது நேரம் கழித்து பயணச்சீட்டு எடுத்துள்ளார். இதனிடையே அந்த பஸ் விழுப்புரம்- திருச்சி மெயின் ரோட்டில் பெட்ரோல் நிலையம் எதிரே வரும்போது சுந்தரமூர்த்தி மீண்டும் சுரேஷிடம் பிரச்சினை செய்து அவரை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுரேஷ், விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சுந்தரமூர்த்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.