சாமியார் மீது 6 பிரிவுகளில் வழக்கு- மதுரை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மிரட்டல் விடுத்த சாமியார் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து மதுரை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மிரட்டல் விடுத்த சாமியார் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து மதுரை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சாமியாரின் மிரட்டல்
சனாதனம் குறித்த பேச்சுக்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி பரிசு அறிவித்த உத்தரபிரதேச மாநில சாமியார் ராமசந்திர தாஸ் பரமகன்சா ஆச்சாரியாவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். சாமியாருக்கு எதிராக தி.மு.க.வினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், நேற்று மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தி.மு.க. வக்கீல் அணி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
அதில், சாமியார் பரமகன்சா ஆச்சாரியா வெளியிட்டுள்ள வீடியோ தமிழக மக்களிடம் அச்சத்தையும், கலவரத்தை தூண்டும் விதமாக அமைத்துள்ளது. எனவே, அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
6 பிரிவுகளில் வழக்கு
அதன்பேரில் மதுரை மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி, கலகத்தை விளைவிக்கும் நோக்கில் செயல்படுதல், ஒற்றுமைக்கு குந்தகமாக செயல்படுதல், அமைதியின்மையை வேண்டுமென்றே ஏற்படுத்துதல், மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துதல், தீய எண்ணத்தை உருவாக்குதல், கொலை மிரட்டல் ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இதே போல் சாமியாரின் டுவிட்டர் கணக்கை கையாளும் பியூஸ் ராய் என்பவர் மீதும் அதே 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.