விதை உற்பத்தியாளர், விற்பனையாளர்கள் மீது வழக்கு
வேலூர் மாவட்டத்தில் தரமற்ற விதைகள் விற்பனை செய்த 9 விதை உற்பத்தியாளர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக விதை ஆய்வு துணை இயக்குனர் கோ.சோமு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பதிவு எண்
வேலூர் மாவட்டத்தில் நெல், எள், பயறு வகை பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், காய்கறி பயிர்கள் அதிக அளவில் பயிர் செய்யப்படுகிறது. இவற்றை பயிரிட வேளாண்மை துறை மட்டுமின்றி தனியார் துறை விதை உற்பத்தியாளர்களும் விதைகள் உற்பத்தி செய்து வருகின்றனர்.
இந்த விற்பனையை ஒழுங்குமுறைப்படுத்த விதை சான்று மற்றும் அங்கக சான்று துறை மூலம் தனியார் ரகம் மற்றும் வீரிய ரகங்களை பதிவு செய்து பதிவு எண் பெற்ற பிறகு விற்பனை செய்ய வேண்டும்.
பதிவு செய்யப்படாத ரகங்களை விற்பனையாளர்கள் இருப்பு வைத்திருந்தாலோ, விற்பனை செய்தாலோ அவர்கள் மீது விதைகள் சட்டம் 1966 மற்றும் விதைகள் கட்டுப்பாட்டு ஆணை 1968 ஆகியவற்றின் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து விதை விற்பனையாளர்களும் தங்களிடம் உள்ள விதை இருப்பு மற்றும் விற்பனை செய்த விதை விவரங்களை, பயிர் மற்றும் ரகம் வாரியாக மாதம் தோறும் 5-ந்தேதிக்குள் 'ஸ்பெக்ஸ்' மென்பொருள் பக்கத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
விதைகள் சம்பந்தமான ஏதாவது புகார்கள் இருந்தால், வேலூர் வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் இயங்கி வரும் விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
9 பேர்மீது வழக்கு
மேலும் அரசு நிர்ணயித்த விதை தரத்தில்தான் விதைகளை விற்பனை செய்ய வேண்டும். தரமற்ற விதைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு, துறை நடவடிக்கையோ அல்லது சட்ட நடவடிக்கையோ எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் 22-ந்தேதி முதல் இதுவரை 2,568 விதை மாதிரிகள் எடுத்து ஆய்வுக்கு அனுப்பியதில் 95 விதை மாதிரிகள் தரம் குறைவானது என கண்டறியப்பட்டுள்ளது. இதில் 86 விதை மாதிரிகள் மீது துறை நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஒரு மாத காலத்திற்கு விதை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 9 விதை மாதிரிகள் வரையறைக்கு மேல் தரம் குறைவானதால் சட்ட நடவடிக்கை எடுத்திட விதை உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர்கள் 9 பேர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.