தந்தையை கடித்த மகன் மீது வழக்கு
தா.பழூர் அருகே தந்தையை கடித்த மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கீழமைக்கேல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தாமஸ் (வயது 60). இவரது மனைவி அருள்மேரி (55). இவர்களுக்கு ஆரோக்கிய ஜெகன் (31) என்கிற மகனும், ஜான்சி என்கிற மகளும் உள்ளனர். தாமஸ் கத்தார் நாட்டில் பணிபுரிந்து விட்டு கடந்த 4 நாட்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பி உள்ளார். தாமஸின் மகள் ஜான்சி கும்பகோணத்தில் விடுதியில் தங்கி 11-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று ஆரோக்கிய ஜெகன் தனது தங்கை ஜான்சியை கும்பகோணம் விடுதியில் சந்தித்து அவருக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து விட்டு வந்துள்ளார். இதனை தாமஸ் கண்டித்துள்ளார். இதனால் தந்தை-மகன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ஆரோக்கிய ஜெகன் தனது தந்தை தாமசை தாக்கியுள்ளார். இதைதடுக்க வந்த தாய் அருள் மேரியையும் தாக்கியுள்ளார். பின்னர் தனது தந்தையின் தொடை மற்றும் உயிர் நிலைகளில் கடித்து உள்ளார். இதில், படுகாயம் அடைந்த தாமஸ் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து அருள் மேரி கொடுத்த புகாரின் பேரில் தா.பழூர் சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.