தேனியில் மரங்களை வெட்டியவர் மீது வழக்கு
தேனியில் மரங்களை வெட்டியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தேனி என்.ஆர்.டி. நகரில் பழைய பத்திரப்பதிவு அலுவலக சாலையில் கடந்த 2-ந்தேதி பசுமையாக இருந்த மரங்கள் வெட்டப்பட்டன. இதில் ஒரு மரம் வேரோடு வெட்டி அகற்றப்பட்டன. மற்றொரு பழமையான புங்கை மரத்தின் கிளைகள் முழுமையாக வெட்டப்பட்ட நிலையில், அப்பகுதியை சேர்ந்த தன்னார்வ இளைஞர்கள் சிலர் அந்த பணிகளை தடுத்து நிறுத்தினர். மாவட்ட கலெக்டரின் அனுமதி பெறாமல் மரங்களை வெட்டக்கூடாது என்று பணிகளை தடுத்து நிறுத்தியதோடு, இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டரிடம், தன்னார்வ இளைஞர்கள் புகார் கொடுத்தனர்.
அதுபோல், நாம் தமிழர் கட்சி தரப்பில் தேனி போலீஸ் நிலையத்திலும் மரம் வெட்டப்பட்ட சம்பவம் குறித்து புகார் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த மரம் வெட்டப்பட்ட சம்பவம் குறித்து தேனி கிராம நிர்வாக அலுவலர் கண்ணன், தேனி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் செய்தார். அடுத்தடுத்து புகார்கள் குவிந்த நிலையில், தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளர் வீரமுத்துக்குமார் தேனி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார்.
அதில், அல்லிநகரம் அம்பேத்கர் நடுத்தெருவை சேர்ந்த பாண்டி என்பவருக்கு என்.ஆர்.டி. நகர் மெயின் ரோட்டில் உள்ள மரங்களில் சில கிளைகளை அகற்றுவதற்கு பணி உத்தரவு வழங்கப்பட்ட நிலையில், அவர் புங்கை மரத்தை வெட்டி சேதப்படுத்தி விட்டதாகவும், இதை தட்டிக் கேட்ட நகராட்சி மின் பணியாளர் ஜெயராஜை ஆபாசமாக பேசியதாகவும் கூறி இருந்தார். இதையடுத்து நகராட்சி ஆணையாளர் கொடுத்த புகாரின் பேரில் பாண்டி மீது தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.