கல்வியை பொது பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து வழக்கு: 3 நீதிபதிகள் கொண்ட முழு அமர்வு விசாரணைக்கு மாற்றம்


கல்வியை பொது பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து வழக்கு: 3 நீதிபதிகள் கொண்ட முழு அமர்வு விசாரணைக்கு மாற்றம்
x

கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றிய மத்திய அரசின் சட்டத்திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட முழு அமர்வுக்கு மாற்றி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

ஆயிரம் விளக்கு தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., டாக்டர் எழிலன் நடத்திவரும் அறம் செய்ய விரும்பு என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:-

அதிகாரம் பறிப்பு

கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மத்திய அரசு மாற்றி சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது. இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. மிகப்பெரிய விதிமீறலாகும்.

இந்தியாவில் 1975-ம் ஆண்டு முதல் 1977-ம் ஆண்டு வரையிலான நெருக்கடி நிலை காலத்தில், பல்வேறு சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. முக்கியமாக மாநில அரசுகளின் அதிகாரம் பறிக்கப்பட்டு, மத்திய அரசு பல அதிகாரங்களை எடுத்துக் கொண்டது.

5 துறைகள் மாற்றம்

மாநில அரசின் சில அதிகாரங்கள் பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டன. 1976-ம் ஆண்டு மொத்தம் 5 முக்கியமான துறைகள் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டன.

காடுகள் நிர்வாகம், கல்வி, எடை மற்றும் அளவிடல், விலங்குகள் மற்றும் பறவைகள் பாதுகாப்பு, நீதி நிர்வாகம் ஆகியவை மாநில கட்டுப்பாட்டில் இருந்து பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டன.

மத்திய அரசு கல்வியை பொதுபட்டியலுக்கு மாற்றியதால், நீட் தேர்வுகள், புதிய தேசிய கல்விக்கொள்கை போன்ற சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன. எனவே, இந்த சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முழு அமர்வு

இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, இதுகுறித்து மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது. இந்தநிலையில், இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி எம்.துரைசாமி, நீதிபதி சுந்தர்மோகன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்து, இந்த வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட முழு அமர்வு விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.


Next Story