கந்துவட்டி கேட்டு விவசாயியை மிரட்டிய 2 நிதி நிறுவன உரிமையாளர்கள் மீது வழக்கு


கந்துவட்டி கேட்டு விவசாயியை மிரட்டிய 2 நிதி நிறுவன உரிமையாளர்கள் மீது வழக்கு
x

சிதம்பரத்தில் கந்துவட்டி கேட்டு விவசாயியை மிரட்டிய 2 நிதி நிறுவன உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடலூர்

அண்ணாமலைநகர்,

நிதி நிறுவனத்தில் கடன்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள உத்தமசோழகன் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி குணசேகரன்(வயது 51). இவர், வீடு கட்டுவதற்காக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சிதம்பரம் அண்ணாமலை நகரில் நிதி நிறுவனம் நடத்தி வரும் முத்தையாநகரை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவரிடம் நிலப்பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.3 லட்சம் கடன் வாங்கினார். இதில் ரூ.1 லட்சத்தை குணசேகரன் கொடுத்துவிட்டார்.

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 21-ந்தேதி குணசேகரனிடம் ரூ.11 லட்சத்து 48 ஆயிரம் கொடுத்தால்தான் பத்திரத்தை திருப்பி தர முடியும் என நிதி நிறுவன உரிமையாளர் கூறியதாக தெரிகிறது.

கந்துவட்டி கேட்டு மிரட்டல்

இதேபோல் குணசேகரன் கடந்த 2021-ம் ஆண்டு சிதம்பரம் பச்சையப்பன் பள்ளி தெருவில் ரகு என்பவர் நடத்தி வரும் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.30 ஆயிரம் கடன் வாங்கினார். பின்னர் சில நாட்களுக்கு பிறகு ரகு மற்றும் அவரது நிதி நிறுவனத்தில் வேலை செய்யும் ஆனந்த் ஆகியோர் வலுக்கட்டாயமாக ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் வாங்கியதாக குணசேகரனிடம் பத்திரத்தில் கையெழுத்து வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்த 2 சம்பவம் குறித்து குணசேகரன் அண்ணாமலைநகர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், 2 நிதி நிறுவன உரிமையாளர்கள் உள்பட 4 பேர் தன்னிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டுவதாகவும், தனது நிலத்தை அபகரிக்க முயற்சி செய்வதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார்.

4 பேர் மீது வழக்குப்பதிவு

அதன்பேரில் சத்தியமூர்த்தி, அருண், ரகு, ஆனந்த் ஆகிய 4 பேர் மீது கந்துவட்டி கேட்டு மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது பற்றி அறிந்ததும் 4 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

2 நிதி நிறுவனங்களில் சோதனை

மேலும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி தலைமையிலான தனிப்படையினர் அண்ணாமலை நகர் மற்றும் சிதம்பரம் பச்சையப்பன் பள்ளி தெருவில் உள்ள நிதி நிறுவனங்களில் வருவாய்த்துறையினர் உதவியுடன் அதிரடி சோதனை நடத்தினர்.

நிதி நிறுவனங்களை நடத்தி வரும் உரிமையாளர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையில் எழுதப்படாத வெற்று பத்திரத்தில் கையொப்பம் பெறப்பட்ட ஆவணங்கள், நிரப்பப்படாத வங்கி காசோலைகள், அடமானம் வைக்கப்பட்ட ஏ.டி.எம். கார்டுகள், அடமானம் வைக்கப்பட்ட கல்வி சான்றிதழ்கள், நில பத்திரங்கள், வாகன உரிமை பத்திரங்கள் ஆகியவற்ற போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story