தக்கலை அருகே முன்னாள் காதலனை தாக்கியதாக மாணவி உள்பட 4 பேர் மீது வழக்கு


தக்கலை அருகே முன்னாள் காதலனை தாக்கியதாக மாணவி உள்பட 4 பேர் மீது வழக்கு
x

தக்கலை அருகே முன்னாள் காதலனை தாக்கிய வழக்கில் மாணவி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி

தக்கலை,

தக்கலை அருகே முன்னாள் காதலனை தாக்கிய வழக்கில் மாணவி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் காதலன்

திருவட்டார் அருகே உள்ள மாத்தார் பகுதியை சேர்ந்தவர் தாஸ். இவருடைய மகன் பிரவின் (வயது 22). இவர் வெல்டிங் தொழில் செய்து வருகிறார்.

இவரும், 19 வயது மதிக்கத்தக்க கல்லூரி மாணவியும் ஒரு வருடமாக காதலித்து வந்தனர். இந்தநிலையில் அந்த மாணவி வேறு ஒரு நபரையும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட பிரச்சினையில் இருவரும் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பிரிந்தனர்.

காதலித்த போது மாணவிக்கு ஏராளமான பரிசு பொருட்களை பிரவின் வாங்கி கொடுத்ததாக தெரிகிறது. காதல் முறிந்ததை தொடர்ந்து அவர் அந்த பொருட்களை மாணவியிடம் திருப்பி கேட்டுள்ளார்.

மாணவி மீது வழக்கு

அதற்கு அவர் குறிப்பிட்ட இடத்தை கூறி அங்கு வரும்படி பிரவினிடம் தெரிவித்துள்ளார். அதன்படி அங்கு சென்ற பிரவினை 3 பேர் கொண்ட கும்பல் மாணவியின் கண்முன்னே சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் படுகாயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பிரவின் கொடுத்த புகாரின் பேரில் கல்லூரி மாணவி, ஈத்த விளையை சேர்ந்த ஜோஸ் (30), அணக்கரையை சேர்ந்த ஜெனித் (20) மற்றும் கண்டால் தெரியும் இன்னொரு நபர் என 4 பேர் மீது கொற்றிக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story