தம்பதியை தாக்கிய 7 பேர் மீது வழக்கு
தம்பதியை தாக்கிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தோகைமலை அருகே உள்ள வடசேரி ஒண்டிவீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் குழந்தைவேல் (வயது 47). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பொன்னுசாமி, பால்ராஜ், வாசுக்குமார் ஆகியோருக்கும் வீடு கட்டுவதில் சந்து விடுவது சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் சம்பவத்தன்று குழந்தைவேல் தனது வீட்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பொன்னுச்சாமி, பால்ராஜ், வாசுக்குமார், சதீஷ்குமார், அருண்குமார், சந்துரு, தியாகராஜன் ஆகிய 7 பேரும் முன்விரோதம் காரணமாக குழந்தைவேலை தகாதவார்த்தையால் திட்டி கீழே தள்ளி குச்சியால் தாக்கினர். இதனை தடுக்க வந்த குழந்தைவேலின் மனைவி மாரிக்கண்ணுவையும் அவர்கள் கையால் அடித்து தாக்கியுள்ளனர். இதையடுத்து குழந்தைவேல்-மாரிக்கண்ணு தம்பதி திருச்சி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், ேதாகைமலை போலீசார் பொன்னுசாமி, பால்ராஜ், வாசுக்குமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.