ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி மீது காரை கொண்டு மோத வந்தவர் மீது வழக்கு
உடன்குடியில் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி மீது காரை கொண்டு மோத வந்தவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
குலசேகரன்பட்டினம்:
உடன்குடி கொம்புடையார் தெருவை சேர்ந்த வேல் என்பவருடைய மகன் குணசீலன் (வயது 43). இவர் ஆம் ஆத்மி கட்சியின் தூத்துக்குடி மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இவர் உடன்குடி பஸ்நிலையம் அருகே செயல்பட்டு வரும் சார் பதிவாளர் அலுவலகத்தை உடன்குடியில் இருந்து 4 கிலோமீட்டர் தூரத்திற்கு ஒதுக்குப்புறமாக கொண்டு செல்வதை கண்டித்து மதுரை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்து புதிய கட்டிடத்தின் பணியை நிறுத்தி வைத்துள்ளார். இதுதொடர்பாக குலசேகரன்பட்டினம் லாத்துமாக்குடி தெருவை சேர்ந்த ஜீனத் மகன் அப்துல் ஹமீது என்பவருக்கும், குணசீலனுக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் குணசீலன் தனது மோட்டார் சைக்கிளில் உடன்குடி ஆர்.சி.சர்ச் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது முன்விரோதம் காரணமாக அப்துல் ஹமீது ஓட்டி வந்த காரை கொண்டு, குணசீலன் மோட்டார் சைக்கிள் மேல் மோதுவது போல் சென்றுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் ரகுராஜன் விசாரணை நடத்தி வருகிறார்.