சமயபுரம் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் போது தங்க காசுகளை திருடிய கோவில் செயல் அலுவலர் மீது வழக்கு


சமயபுரம் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் போது தங்க காசுகளை திருடிய கோவில் செயல் அலுவலர் மீது வழக்கு
x

சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் போது தங்க காசுகளை திருடிய செயல் அலுவலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர

திருச்சி

சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் போது தங்க காசுகளை திருடிய செயல் அலுவலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

உண்டியல் காணிக்கை

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளை கோவில் நிர்வாகம் சார்பில் மாதம் இருமுறை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் மாரியம்மன் கோவில் மண்டபத்தின் மாடியில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் கல்யாணி முன்னிலையில் நடைபெற்ற இந்த பணியில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், வங்கி ஊழியர்கள், கோவில் பணியாளர்கள் உள்ளிட்டோர் உண்டியலில் இருந்த பணம், வெள்ளி, தங்க நகைகளை தனித்தனியாக பிரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது, திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் வெற்றிவேல் என்பவர் தங்க காசுகளை எடுத்து மறைத்து வைத்ததை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிலர் பார்த்து, அதுப்பற்றி இணை ஆணையர் கல்யாணியிடம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து உடனே அவரை, தனி அறைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்ய கோவில் பணியாளர்கள் 3 பேரை அனுப்பி வைத்தார். சோதனையில், அவரது சட்டை பையில் தங்க காசுகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

தற்கொலை மிரட்டல்

இதைத் தொடர்ந்து அவரிடம் இருந்த 30 கிராம் எடையுள்ள 5 தங்க காசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில், என்மீது நடவடிக்கை எடுத்தால் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று வெற்றிவேல் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, இணை ஆணையர் கல்யாணி இந்த சம்பவம் குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், திருச்சி மண்டல இணை ஆணையர், சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் ஆகியோரிடம் புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் செயல் அலுவலர் வெற்றிவேல் மீது வழக்குப்பதிவு செய்தார். நேற்று முன்தினம் வெற்றிவேல் செயல் அலுவலராக பணியாற்றும் திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றதாக கூறப்படுகிறது.

சமயபுரம் வந்தது ஏன்?

அந்தக் கோவில் செயல் அலுவலராக பணியாற்றும் வெற்றிவேல் அங்கு பணியில் இல்லாமல் சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணிக்கு வந்தது ஏன்? தங்கம் அல்லது பணத்தை திருடும் நோக்கில் திட்டமிட்டு அவர் சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கலந்து கொண்டாரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. வேலியே பயிரை மேய்ந்த கதையாக கோவில் செயல் அலுவலரே காணிக்கையில் கை வைத்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story