பெண்ணின் பெயரை வெளியிட்ட யூ-டியூபர் மீது வழக்கு
பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட யூ-டியூபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தலைமறைவான அவரை பிடித்து கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
ஊட்டி
பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட யூ-டியூபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தலைமறைவான அவரை பிடித்து கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
பாலியல் தொல்லை
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்தவர் மோகன கிருஷ்ணன் (வயது 51). ஊட்டியில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 'கே' பிரிவில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர் அதே அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் திருமணமான 38 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து அந்த பெண், நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத்திடம் மனு கொடுத்தார்.
அதன்பேரில் விசாரணை நடத்தியபோது, அந்த பெண்ணுக்கு மோகன கிருஷ்ணன் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இது தவிர மேலும் சில பெண்களுக்கும் அவர் பாலியல் தொல்லை கொடுத்த தகவலும் வெளியானது.
யூ-டியூப் சேனலில் வீடியோ
இதையடுத்து ஊட்டி அனைத்து மகளிர் போலீசார் பணியிடத்தில் பாலியல் தொல்லை கொடுத்தல், கொலை மிரட்டல் ஆகிய சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து மோகன கிருஷ்ணனை கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையில் சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த சிவசுப்பிரமணியம்(வயது 50) என்பவர் தனது யூ-டியூப் சேனலில், அந்த பாலியல் சம்பவம் குறித்த செய்தியை வீடியோவாக வெளியிட்டு இருந்தார். அதில், அந்த பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் மற்றும் முதல் தகவல் அறிக்கை குறித்த விவரங்களை வெளியிடப்பட்டு இருந்தது.
வலைவீச்சு
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண், ஊட்டி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் கோர்ட்டு உத்தரவின் பேரில் ஊட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிலிப் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிடுதல், பெண்ணை அவமதித்தல் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு ஆகிய 3 சட்டப்பிரிவுகளில் சிவசுப்பிரமணியன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதை அறிந்ததும், யூ-டியூபர் சிவசுப்பிரமணியன் தலைமறைவாகி விட்டார். அவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அவர் வெளியிட்ட வீடியோ, சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.