முதுகுளத்தூரில் வருவாய் கோட்ட அலுவலகம் தொடங்கக்கோரி வழக்கு


முதுகுளத்தூரில் வருவாய் கோட்ட அலுவலகம் தொடங்கக்கோரி வழக்கு
x

முதுகுளத்தூரில் வருவாய் கோட்ட அலுவலகம் தொடங்கக்கோரி வழக்கில் அதிகாரிகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வக்கீல் முனியசாமி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி ஆகிய 2 வருவாய் கோட்ட அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. முதுகுளத்தூர், கமுதி, கடலாடி உள்பட 9 தாலுகாக்கள் உள்ளன. முதுகுளத்தூர் பகுதியில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் பிறப்பு சான்று, இறப்பு சான்று பெற, பட்டா மேல்முறையீடு செய்ய வேண்டிய நிலை உள்ளது.இதற்காக இங்குள்ள மக்கள் பல கிலோ மீட்டர் பயணம் செய்து, பரமக்குடி வருவாய் கோட்ட அலுவலகம் செல்ல வேண்டியுள்ளது. உச்சிநத்தம், பெருனாளி, நரிப்பையூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் 150 கிலோ மீட்டர் பயணம் செய்து, பரமக்குடி கோட்டாட்சியர் அலுவலகம் வர வேண்டியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இங்கு இமானுவேல் சேகரனார் நினைவு தினம், தேவர் குருபூஜை ஆகியவையும் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இதுதொடர்பான கூட்டங்களுக்கு பலதரப்பட்டவர்களும் பல கிலோ மீட்டர் தூரம் செல்லுகின்றனர்.இவற்றை கருத்தில் கொண்டு, முதுகுளத்தூரில் வருவாய் கோட்ட அலுவலகம் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பப்பட்டு உள்ளது. இதுவரை எந்த பதிலும் இல்லை. இது, இந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகவும் உள்ளது. எனவே எங்கள் கோரிக்கை மனு அடிப்படையில் முதுகுளத்தூரில் வருவாய் கோட்ட அலுவலகம் தொடங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.


Related Tags :
Next Story