கோவையில் கார் வெடித்து வாலிபர் பலியான வழக்கு: என்.ஐ.ஏ. விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரை


கோவையில் கார் வெடித்து வாலிபர் பலியான வழக்கு: என்.ஐ.ஏ. விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரை
x

கோவையில் கார் வெடித்து வாலிபர் பலியான வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரிக்க தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.

சென்னை,

கோவை கோட்டை மேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த 23-ந் தேதி அதிகாலையில் கார் திடீரென்று வெடித்து சிதறியது.

இந்த சம்பவத்தில் காரில் இருந்த ஒருவர் பலியானார். அவர் அதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் (வயது 29) என்பது தெரியவந்தது.

டி.ஜி.பி. நேரில் விசாரணை

இதையடுத்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, விசாரணையை துரிதப்படுத்தினார். இதற்காக 6 தனிப்படைகளும் அமைக்கப்பட்டன. முதற்கட்ட விசாரணையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்பட்டது. மேலும் தடயவியல் நிபுணர்கள் அங்கு நடத்திய சோதனையில், இரும்பு குண்டுகள், ஆணிகள் உள்ளிட்டவை கிடந்ததும் கண்டறியப்பட்டன.

இதனால் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு, காரில் இறந்து கிடந்த ஜமேஷா முபினின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு பொட்டாசியம் குளோரைடு, அலுமினியம் நைட்ரேட், சல்பர் உள்ளிட்ட வெடிபொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். ஜமேஷா முபின் வீட்டின் அருகே இருந்த கண்காணிப்பு கேமராவை எடுத்து ஆய்வு செய்தபோது, அவருடன் சேர்ந்து சிலர் ஒரு மூட்டையை எடுத்து செல்லும் வீடியோவும் பதிவாகி இருந்தது.

மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம்

அதன் அடிப்படையில், ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), பிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (27) ஆகிய 5 பேரை போலீசார் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டப்பிரிவின் (உபா) கீழ் கைது செய்தனர். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக பல்வேறு விவாதங்கள், கருத்துகள் உலா வந்த வண்ணம் இருக்கின்றன.

தமிழக போலீசார் தொடர்ந்து இந்த விசாரணையில் தீவிரம் காட்டி வரும் நிலையில், இந்த விசாரணை தொடர்பாகவும், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்தும் சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில் தலைமை செயலாளர் வெ.இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் க.பணீந்திர ரெட்டி, போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, முதல்-அமைச்சரின் செயலாளர்-1 உதயச்சந்திரன், போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. (நுண்ணறிவு) டேவிட்சன் தேவாசிர்வாதம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆய்வு கூட்டத்தில், கோவை சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உள்பட அதிகாரிகள் எடுத்து கூறினர். மேலும் அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்தும் இதில் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

மத்திய அரசுக்கு பரிந்துரை

சுமார் 30 நிமிடம் நீடித்த இந்த ஆய்வு கூட்டம் முடிந்ததும், இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது. அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்த ஆய்வு கூட்டத்தில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக போலீசாரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை குறித்தும், கோவை மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை குறித்தும், கோவை மாவட்டத்தில் பாதுகாப்பினை மேலும் உறுதி செய்திடவும் முதல்-அமைச்சர், போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதுபோன்ற சம்பவங்களின் விசாரணையில், மாநிலம் தாண்டிய பரிணாமங்களும், பன்னாட்டு தொடர்புகளும் இருக்க வாய்ப்பு உள்ளதால், இந்த வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றி, மத்திய அரசுக்கு உரிய பரிந்துரைகளை செய்திட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

சிறப்பு படை

மேலும், கோவை மாநகரின் பாதுகாப்பினை மேலும் வலுப்படுத்திட கரும்புக்கடை, சுந்தராபுரம், கவுண்டம்பாளையம் ஆகிய 3 பகுதிகளில் புதிய போலீஸ் நிலையங்கள் உடனடியாக அமைத்திடவும், மாநிலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள், சம்பவங்கள் வருங்காலங்களில் நடைபெறாமல் தடுத்திடும் வகையில் போலீஸ் துறையில் ஒரு சிறப்பு படையை உருவாக்கிடவும் முதல்-அமைச்சர் உத்தரவிட்டு இருக்கிறார்.

இதுதவிர கோவை உள்பட தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலும், மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய முக்கிய பகுதிகளிலும், கூடுதல் நவீன கண்காணிப்பு கேமராக்களை விரைவில் பொருத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மாநிலத்தின் உளவுப்பிரிவில் கூடுதல் போலீஸ் அதிகாரிகளை நியமனம் செய்திடவும், இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரை பற்றியும், அவர்களோடு தொடர்பு வைத்திருப்பவர்களை பற்றியும் நுண்ணிய தகவல்களை அளிப்போருக்கு தக்க பாதுகாப்பினை வழங்கிடவும், அவர்களை ஊக்குவித்திடவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story