12 சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு
பாதுகாப்பு இல்லத்தில் இருந்து சிறுவர்கள் தப்பி ஓடியது, ரகளையில் ஈடுபட்டது தொடர்பாக 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுவர்கள் தப்பி ஓட்டம்
வேலூர் காகிதப்பட்டறையில் சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் அரசு பாதுகாப்பு இல்லம் இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு 6 சிறுவர்கள் பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளிகளை தாக்கி விட்டு சுற்றுச்சுவர் ஏறி குதித்து தப்பி ஓடினர். அவர்களில் 4 பேரை போலீசார் பிடித்துள்ளனர். ஒருவர் சேலத்தில் சரண் அடைந்தார். மற்றொருவரை தேடி வருகின்றனர்.
இதற்கிடையே இல்லத்தில் இருந்த மற்ற சிறுவர்கள் ரகளையில் ஈடுபட்டனர். பாதுகாப்பு இல்லத்தில் சிறுவர்கள் தப்பி ஓடிய சம்பவம் மற்றும் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரகளை
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று முன்தினம் அதே பாதுகாப்பு இல்லத்தில் 5 சிறுவர்கள் சுற்றுச்சுவர் ஏறி குதித்து தப்பி ஓடினர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து அதே இல்லத்தில் மீண்டும் அடைத்தனர்.
இதற்கிடையே இல்லத்தில் தங்கியிருந்த சிறுவர்கள் சிலர் கட்டிடத்தின் மேலே ஏறி தங்களை ஜாமீனில் வெளியே விடும்படி ரகளையில் ஈடுபட்டனர்.
12 பேர் மீது வழக்குப்பதிவு
இந்தநிலையில் தப்பி ஓடிய 5 சிறுவர்கள் மீதும், ரகளையில் ஈடுபட்ட 7 பேர் மீதும் வேலூர் வடக்கு போலீசில் பாதுகாப்பு இல்ல கண்காணிப்பாளர் விஜயகுமார் புகார் அளித்தார். அதன்பேரில் 12 சிறுவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதுகாப்பு இல்லத்தில் சிறுவர்கள் தப்பிச் செல்வதற்கான அனைத்து அம்சங்களும் உள்ளது. திரும்ப, திரும்ப இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கிறது. சிறுவர்கள் தப்பிச்செல்லாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை ஏற்படுத்த வேண்டும் என்று போலீசார் கூறினர்.