ஆத்தூர் தனியார் வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.3¼ லட்சம் மோசடி-2 பேர் மீது வழக்குப்பதிவு
ஆத்தூர் தனியார் வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.3¼ லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆத்தூர்:
போலீசில் புகார்
சேலம் மாவட்டம் ஆத்தூர் காமராஜர் ரோட்டில் தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் மேலாளர் ஆத்தூர் நேதாஜி நகரை சேர்ந்த லட்சுமிபதி (வயது 45) என்பவர் ஆத்தூர் டவுன் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த நாராயணன் என்பவர் ஆத்தூரில் வசிப்பதாக கூறினார். அவர், பெரம்பலூர் மாவட்டம் அம்பாவுரை சேர்ந்த தனராஜ் என்பவரை எங்களுக்கு அறிமுகம் செய்ததுடன் வங்கியில் கணக்கு தொடங்க செய்தார்.
போலி நகைகள் அடகு
இதற்கிடையே தனராஜ், 80 கிராம் எடையுள்ள 4 வளையல்களை வங்கியில் அடகு வைத்து ரூ.1 லட்சத்து 80 ஆயிரமும், மற்றொரு கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 55 ஆயிரமும் கடன் பெற்றுள்ளார். இந்த நகைகளை ஆய்வு செய்த போது அவை தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகள் என்பதும், போலி நகைகளை அடகு வைத்து தனராஜ் மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
மோசடியில் ஈடுபட்ட தனராஜ், அவருக்கு உடந்தையாக இருந்த நாராயணன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
2 பேர் மீது வழக்கு
இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி நாராயணன், (வயது 36), தனராஜ் (36) ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.