(செய்தி சிதறல்) அனுமதியின்றி ஊர்வலம் சென்ற முன்னாள் அமைச்சர் உள்பட 72 பேர் மீது வழக்குப்பதிவு


(செய்தி சிதறல்) அனுமதியின்றி ஊர்வலம் சென்ற முன்னாள் அமைச்சர் உள்பட 72 பேர் மீது வழக்குப்பதிவு
x

அனுமதியின்றி ஊர்வலம் சென்ற முன்னாள் அமைச்சர் உள்பட 72 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி

அனுமதியின்றி ஊர்வலம் சென்ற முன்னாள் அமைச்சர் உள்பட 72 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முப்பெரும் விழா மாநாடு

திருச்சி பொன்மலை ஜி.கார்னர் மைதானத்தில் கடந்த 24-ந் தேதி ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் முப்பெரும் விழா மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டையொட்டி அன்று மாலை திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் பகுதியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை மாநாடு நடைபெறும் இடம் வரை கட்சி நிர்வாகிகள் ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

இதையடுத்து பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாகவும், அனுமதியின்றி ஊர்வலம் நடத்தியதாகவும் கூறி, திருச்சி கண்டோன்மெண்ட் போலீசார் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், ஜவகர் உள்பட 72 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அ.ம.மு.க.செயலாளர் மீது தாக்குதல்

*திருச்சி மாநகர் மாவட்ட 14-வது வட்ட அ.ம.மு.க. செயலாளர் சுடலைமுத்து (52). மலைக்கோட்டை சின்னக்கடை வீதி அருகில் கோவில் சந்து பகுதியில் வசித்து வரும் இவர் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சறுக்குப்பாறையில் அன்னதானம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதற்காக அனுமதி பெறப்பட்ட பிளக்ஸ் பேனர் சம்பந்தப்பட்ட இடத்தில் வைத்துள்ளார். இதில் அந்த இடத்தில் உள்ள ஓட்டலை மறைப்பதாக கூறி உடனடியாக அகற்றும்படி நேற்று முன்தினம் மாலை கூறியுள்ளார். அதற்கு சுடலைமுத்து அன்னதானம் முடிந்தவுடன் எடுத்துக்கொள்வதாக கூறியுள்ளனர். இதில் வாக்குவாதம் முற்றி தகராறில் ஈடுபட்டு, ஓட்டலில் இருந்த 10-க்கும் மேற்பட்டோர் சுடலைமுத்துவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சுடலைமுத்துவிற்கு பலத்த காயம் ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓட்டல் உரிமையாளரான அரபிக்குளத்தெருவை சேர்ந்த மயில்வாகனன் ( 55), பனையக்குறிச்சியை சேர்ந்த நமச்சிவாயம் (29) ஆகியோரை கைது செய்தனர்.

தி.மு.க.கவுன்சிலர் மீது தாக்குதல்

*முசிறியில் மாரியம்மன் கோவில் விழாவில் பேனர் வைக்கப்பட்டது தொடர்பாக 2 தரப்பினர் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சாலியர் தெருவை சேர்ந்த முசிறி நகராட்சி தி.மு.க. கவுன்சிலர் நவீன் ராஜ்குமாரை (35) அதே பகுதியை சேர்ந்த சரவணன், மீனாட்சி சுந்தரம், கிருபாகரன், லோகேஷ் ஆகிய நால்வரும் சேர்ந்து தரக்குறைவாக பேசி தாக்கியதாக தெரிகிறது. இது குறித்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைதி சாவு

*திருவாரூரை சேர்ந்தவர் வீராசாமி (60). இவர் பெண்ணை துன்புறுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 2015-ம் ஆண்டு முதல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். கடந்த 28-ந் தேதி வீராசாமிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் மத்திய சிறை அதிகாரி சண்முகசுந்தரம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

1 கிலோ கஞ்சா பறிமுதல்

*திருச்சி உறையூர் மார்க்கெட் பகுதியில் நேற்று முன்தினம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டு இருந்த உறையூர் வடக்கு பங்காளிதெருவை சேர்ந்த முகமதுஆசிப் (20) என்பவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் ஒரு பையில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

வாலிபர் தற்கொலை

*திருச்சி ராம்ஜிநகரை அடுத்த புங்கனூர் தாய்நகரை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவரது மகன் நரேஷ்குப்தா (23). இவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையின் பொறுப்பாளராக (100 நாள் வேலை) பணிபுரிந்து வந்தார். தலைவலியால் அவதி அடைந்து வந்த இவர் நேற்று வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின்பேரில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போதை மாத்திரை விற்றவர் கைது

*திருச்சி மதுரை ரோட்டில் உள்ள பழைய குட்செட் ரோட்டில் ெரயில்வே கிரவுண்டு அருகில் போதை மாத்திரைகள் விற்பனை செய்து கொண்டிருந்த திருச்சி சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்த சதாம் உசேன் (22) என்பவரை கோட்டை போலீசார் கைது செய்தனர். இதில் அவரிடம் இருந்த போதை மாத்திரைகள் 51 மற்றும் தண்ணீர் பாட்டில், ஊசி 5 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


Next Story