கிடாய் முட்டு போட்டி நடத்த அனுமதிகோரி வழக்கு: அரசு தரப்பு பதில் அளிக்க அவகாசம்
கிடாய் முட்டு போட்டி நடத்த அனுமதிகோரி வழக்கில் அரசு தரப்பு பதில் அளிக்க அவகாசம் வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சவுகத் அலி மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் கிராமத்தில் சில ஆண்டுகளாக கிடாய் முட்டு போட்டி நடத்தி வருகிறோம். எங்கள் கிராமத்தில் நடைபெறும் இந்த போட்டியில் மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட கிடாய்கள் பங்கேற்பது வழக்கம். அரசு விதித்துள்ள அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றியே இந்த போட்டி நடைபெறும். இதில் எந்த விதமான சூதாட்டத்துக்கும் இடமில்லை.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போன்று கிடாய் முட்டு போட்டியை நடத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக நடத்தப்படுகிறது.
இந்த போட்டிக்கு அனுமதிகோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, வருகிற 25-ந் தேதி காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை கிடாய் முட்டு போட்டி நடத்த அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, கிடாய் முட்டு போட்டிக்கு அனுமதி வழங்குவது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் பெற்று தெரிவிக்க அவகாசம் வேண்டும் என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.