ஸ்டெர்லைட் ஆலை குறித்த கருத்தரங்கு நடத்த அனுமதி கோரி வழக்கு - மதுரை ஐகோர்ட்டில் விசாரணை ஒத்திவைப்பு


ஸ்டெர்லைட் ஆலை குறித்த கருத்தரங்கு நடத்த அனுமதி கோரி வழக்கு - மதுரை ஐகோர்ட்டில் விசாரணை ஒத்திவைப்பு
x

ஸ்டெர்லைட் ஆலை குறித்த கருத்தரங்கு நடத்த அனுமதி கோரி வழக்கை மதுரை ஐகோர்ட்டில் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது

மதுரை


தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு சங்கத்தலைவர் தியாகராஜன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலை கடந்த 2018-ம் ஆண்டு மூடப்பட்டது. இதனால் ஏராளமானோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் ஸ்டெர்லைட் தொழிற்சாலை நிதியின் மூலமாக கல்வி, மருத்துவம், விவசாயம், மகளிர் சுய உதவி குழு வழியாக ஏராளமானவர்கள் பலன் அடைந்து வந்தனர். தற்போது தொழில் நிறுவனங்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் சார்பில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே ஸ்டெர்லைட் ஆலை பற்றிய அறிவியல்பூர்வமான உண்மையை மக்களுக்கு எடுத்து கூறும்படியாக 50 ஆயிரம் பேர் கலந்துகொள்ளும் விளக்க கருத்தரங்கத்தை நடத்த அனுமதி கோரி, தூத்துக்குடி சிப்காட் போலீசாரிடம் மனு அளித்தோம். ஆனால் போலீஸ் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இதை ரத்து செய்து, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது குறித்த கருத்தரங்கிற்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்கு விசாரணையில் தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆஜராக அவகாசம் கோரியதால், இந்த வழக்கு விசாரணையை நாளைக்கு (25-ந்தேதி) ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.


Related Tags :
Next Story