மேல்முறையீட்டை விசாரிப்பதில் பழைய நிலை தொடரக்கோரி வழக்கு


மேல்முறையீட்டை விசாரிப்பதில் பழைய நிலை தொடரக்கோரி வழக்கு
x

பட்டா, நில அளவை குறித்த மேல்முறையீட்டை விசாரிப்பதில் பழைய நிலை தொடரக்கோரிய வழக்கில் அரசு தரப்பு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

மதுரை

பட்டா, நில அளவை குறித்த மேல்முறையீட்டை விசாரிப்பதில் பழைய நிலை தொடரக்கோரிய வழக்கில் அரசு தரப்பு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

வருவாய்த்துறை

திருச்சி அண்ணா நகரைச் சேர்ந்த வக்கீல் சவுந்தரராஜன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

தமிழகம் முழுவதும் வருவாய்த்துறையின் கீழ் 78 உதவி செட்டில்ெமன்ட் அலுவலகங்கள் சிறப்பு பிரிவுகளாக செயல்படுகின்றன. இதில் ஒரு தாசில்தார், 2 சிறப்பு வருவாய் ஆய்வாளர்கள், 2 நில அளவையர்கள், ஒரு வரைவாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட 9 பேர் உள்ளனர். இவற்றில் தற்போது 58 சிறப்பு அலுவலகங்கள் மட்டுமே செயல்படுகின்றன.

தமிழகம் முழுவதும் பட்டா நிலம், அரசு புறம்போக்கு நிலங்கள் வகைப்படுத்தல் மற்றும் பட்டா வழங்கப்பட்ட நிலங்களை சரிபார்ப்பது உள்ளிட்ட பணிகளை இந்த சிறப்பு அலுவலகங்கள் மேற்கொள்கின்றன. தற்போது 50 சதவீத பணிகளை இந்த சிறப்பு யூனிட்டுகள் முடித்துள்ளன. உதவி செட்டில்மென்ட் அலுவலரின் உத்தரவை எதிர்த்து செட்டில்மென்ட் அலுவலரிடம் மேல்முறையீடு செய்யலாம். இதேபோல நில அளவை இயக்குனரிடம் சீராய்வு மனுவும் தாக்கல் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தற்போது இந்த அதிகாரங்களை வருவாய் கோட்டாட்சியருக்கும், நில நிர்வாக கமிஷனருக்கும் பிரித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு இடர்பாடுகள் ஏற்படும். எனவே செட்டில்மென்ட் மேல்முறையீடு சம்பந்தமான தற்போதைய அரசாணைக்கு தடை விதித்து பழைய நடைமுறை தொடர உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

பதில் அளிக்க உத்தரவு

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

முடிவில், இந்த வழக்கு குறித்து அரசு தரப்பில் பதில் அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.


Related Tags :
Next Story