பனிப்பொழிவால் முந்திரி சாகுபடி பாதிப்பு


பனிப்பொழிவால் முந்திரி சாகுபடி பாதிப்பு
x
தினத்தந்தி 18 April 2023 12:15 AM IST (Updated: 18 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் பகுதியில் பனிப்பொழிவால் முந்திரி சாகுபடி பாதிப்படைந்துள்ளது. உரிய விலை கிடைக்காததால் அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் பகுதியில் பனிப்பொழிவால் முந்திரி சாகுபடி பாதிப்படைந்துள்ளது. உரிய விலை கிடைக்காததால் அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முந்திரி சாகுபடி

வேதாரண்யம் அடுத்த செம்போடை, தேத்தாகுடி, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி, காரியாபட்டினம், நெய் விளக்கு, குரவப்புலம், செட்டிபுலம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் முந்திரி சாகுபடி செய்ய உள்ளது. ஆண்டு தோறும் இந்த பகுதியில் சுமார் 5 ஆயிரம் டன் முந்திரி விளைச்சல் ஏற்பட்டு விற்பனை செய்வது வழக்கம். கஜா புயலால் இப்பகுதியில் உள்ள முந்திரி தோப்புகள் முற்றிலும் சேதமடைந்தன.

இதனால் முந்திரி விவசாயிகள் கடும் நஷ்டம் அடைந்தனர். இந்த நிலையில் சேதமடைந்த முந்திரியை விவசாயிகள் பராமரித்து தற்போது துளிர்விட்டு மரங்கள் நன்கு வளர்ந்த நிலையில் நன்றாக பூத்து காய்க்க தொடங்கியுள்ளது. இதனால் முந்திரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் தற்போது இரவு நேரங்களில் கடும் பனிப் பொழிவு ஏற்படுவதால் முந்திரி சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பனிப்பொழிவு

மேலும் கடுமையான பூச்சி தாக்குதலும் காணப்படுகிறது. பகலில் வெயிலின் தாக்கத்தினால் முந்திரி நன்றாக விளையும் என்று விவசாயிகள் நம்பி இருந்த நிலையில், இரவில் ஏற்படும் பனிப்பொழிவாலும், பூச்சி தாக்குதலாலும் இந்த ஆண்டு முந்திரி சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுகளில் கிலோ ரூ.130-க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது விலை குறைந்து ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் கடும் நஷ்டம் அடைகின்றனர். எனவே முந்திரிக்கு உரிய விலையை தமிழக அரசு தோட்டக்கலைத்துறை மூலம் நிர்ணயம் செய்து, அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story