(செய்திசிதறல்) பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ரூ.6½ லட்சம் கையாடல் செய்த காசாளர் கைது


(செய்திசிதறல்) பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ரூ.6½ லட்சம் கையாடல் செய்த காசாளர் கைது
x

பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ரூ.6½ லட்சம் கையாடல் செய்த காசாளர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி

பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ரூ.6½ லட்சம் கையாடல் செய்த காசாளர் கைது செய்யப்பட்டார்.

பெட்ரோல் விற்பனை நிலையம்

திருச்சி சேதுராம் பிள்ளை காலனி பகுதியை சேர்ந்தவர் ராமநாதன் (வயது 55). இவர் கண்டோன்மென்ட் பகுதியில் பெட்ரோல் விற்பனை நிலையம் வைத்து நடத்தி வருகிறார். இங்கு திருச்சி பொன்னேரிபுரத்தை சேர்ந்த பிரபாகரன் (27) காசாளராக பணியாற்றி வந்தார்.

இந்தநிலையில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தணிக்கை செய்யப்பட்டபோது, ரூ.6½ லட்சத்தை பிரபாகரன் கையாடல் செய்தது தெரியவந்துள்ளது. இதுபற்றி ராமநாதன் அவரிடம் கேட்டுள்ளார். இதனால், பிரபாகரன் தனது உறவினர் சரவணக்குமாருடன் (36) வந்து ராமநாதனை தகாதவார்த்தைகளால் திட்டியதுடன், அவரை தாக்கியதாக தெரிகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு பணம் கொடுக்க வேண்டிய நிறுவனங்கள் முழு தொகையையும் செலுத்தும் போது, சிறிது தொகையை மட்டும் வரவு வைத்து விட்டு மீதி தொகையை பாக்கியாக கணக்கு காண்பித்து ரூ.6½ லட்சத்தை கையாடல் செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பிரபாகரனை கைது செய்த போலீசார், சரவணக்குமாரை தேடி வருகிறார்கள்.

மதுவிற்றவர் கைது

*காட்டுப்புத்தூர் சுடுகாடு அருகே மது விற்றதாக ரவிச்சந்திரன் (48) என்பவரை காட்டுப்புத்தூர் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 5 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

காதல் ஜோடி தஞ்சம்

*மண்ணச்சநல்லூர் அருகே உள்ள தெற்கு தத்தமங்கலம் அரிசனத் தெருவைச் சேர்ந்தவர் தனபால். இவரது மகள் காருண்யா (20). இவர் நர்சிங் படித்து வருகிறார். இவரும், சமயபுரம் அருகே உள்ள மாகாளிகுடி அரிசன தெருவைச் சேர்ந்த குமார் மகன் நடராஜன் (20) என்பவரும் காதலித்து வந்தனர். இதற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் சமயபுரம் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் பாதுகாப்பு கேட்டு சமயபுரம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் இருதரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் காருண்யாவை நடராஜனுடன் அனுப்பி வைத்தனர்.

பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது

*மணிகண்டம் அருகே உள்ள நாகமங்கலம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல். இவரது மகன் கோகுல் (19). இவர் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இது குறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் மணிகண்டம் போலீசார் கோகுலை கைது செய்து திருச்சி ஜே.எம்.4 கோர்ட்டில் ஆஜர்படுத்தி குற்றவியல் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

வியாபாரியிடம் வழிப்பறி செய்த 3 பேர் கைது

*முசிறி அருகே உள்ள சேருகுடி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் சுரேஷ்குமார் (30). இவர் தனக்கு சொந்தமான ஆட்டோவில் பூண்டு, உருளைக்கிழங்கு மற்றும் மளிகை சாமான்கள் எடுத்துக்கொண்டு கிராம பகுதிகளில் விற்பனை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தண்டலை புத்தூர் சந்தை அருகே சென்ற போது, அதே பகுதியை சேர்ந்த அழகர் மகன் அலெக்சாண்டர் (24), மாரிமுத்து மகன் பிரபாகரன் (28), அர்ஜுனன் மகன் விக்னேஷ்பாரதி (24) உள்பட 4 பேர் சுரேஷ்குமாரை வழிமறித்து அவரிடம் இருந்த ரூ.5,300 மற்றும் அரை பவுன் மோதிரத்தை பறித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிவு அலெக்சாண்டர் உள்பட 3 பேரை கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.


Next Story