விழுப்புரம் அருகே வங்கியில் ரூ.44 லட்சம் திருடிய காசாளர் கைது ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் கையாடல் செய்தது அம்பலம்


விழுப்புரம் அருகே வங்கியில் ரூ.44 லட்சம் திருடிய காசாளர் கைது ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் கையாடல் செய்தது அம்பலம்
x
தினத்தந்தி 28 April 2023 12:15 AM IST (Updated: 28 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே வங்கியில் ரூ.44 லட்சம் திருடிய காசாளர் கைது செய்யப்பட்டார். ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் அவர் வங்கியில் கையாடல் செய்தது அம்பலமாகி உள்ளது.

விழுப்புரம்

விழுப்புரம் அருகே இளங்காட்டை சேர்ந்தவர் முகேஷ் (வயது 29). இவர் விழுப்புரம் அருகே சிந்தாமணி கிராமத்தில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் காசாளராக பணியாற்றி வருகிறார்.

கடந்த 25-ந்தேதி முகேஷ், வங்கியில் இருந்து ரூ.43 லட்சத்து 89 ஆயிரத்து 500-ஐ எடுத்துக்கொண்டு வெளியே சென்றார். அதன் பின்னர் அவர் வங்கிக்கு திரும்பவில்லை.

இதுகுறித்து வங்கி கிளை மேலாளர் கொடுத்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தினர்.

இதனிடையே முகேஷ், தனது உறவினர் ஒருவருக்கு வாட்ஸ்-அப்பில் ஆடியோ ஒன்றை அனுப்பி இருந்தார். அதில் பணத்துக்காக தன்னை ஒரு கும்பல் கடத்திச்சென்று விட்டதாக கூறியிருந்தார். இந்த ஆடியோவை கைப்பற்றி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

மேலும் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தனிப்படை போலீசார் முகேசை பிடிக்க சைபர்கிரைம் போலீசாரின் உதவியுடன் பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தினர்.

சிக்கினார்

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் முகேஷ் இருப்பதாக அவரது செல்போன் நெட்வொர்க் மூலம் தெரிந்தது. உடனே அங்கு தனிப்படை போலீசார் விரைந்து சென்று முகேசை மடக்கிப்பிடித்தனர். மேலும் அவர் வைத்திருந்த பணப்பையையும் கைப்பற்றி அதில் இருந்த பணத்தை எண்ணிப்பார்த்தபோது ரூ.43 லட்சத்து 86 ஆயிரத்து 310 இருந்தது. ரூ.3,190 குறைவாக இருந்தது. அந்த பணத்தை செலவு செய்துவிட்டதாக போலீசாரிடம் முகேஷ் கூறினார்.

பின்னர் ரூ.43 லட்சத்து 86 ஆயிரத்து 310-ஐ பறிமுதல் செய்த போலீசார், முகேசை, தாலுகா போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று அவரிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் வெளியான தகவல்கள் விவரம் வருமாறு:-

ஆன்லைன் ரம்மி

முகேஷ், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அதிக ஆர்வம் செலுத்தி விளையாடி வந்துள்ளார். இதனால் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளார். மேலும் அதில் இழந்த பணத்தை எப்படியாவது மீட்டுவிட வேண்டும் என்று எண்ணி வெளியில் தெரிந்த சிலரிடம் கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாடி உள்ளார். இதற்காக ரூ.8 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளார்.

இருப்பினும் அவரால் பணத்தை மீட்டெடுக்க முடியவில்லை. இதனால் கடன் கொடுத்தவர்கள், கடனை திருப்பிக்கேட்டு முகேசுக்கு கடும் நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் வேறு வழியின்றி வங்கி இருப்பு பணத்தை எடுத்து கடனை அடைத்துவிட முடிவு செய்தார். அதோடு ஆன்லைன் ரம்மியால் இதுவரை இழந்த பணத்திற்கும் ஈடுகட்டும் வகையில் ஒரு பெரிய தொகையை வங்கியில் இருந்து எடுத்துக்கொண்டு எங்காவது சென்று தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துவிட முடிவு செய்து ரூ.43 லட்சத்து 89 ஆயிரத்து 500-ஐ எடுத்துள்ளார்.

கடத்தல் நாடகம் அம்பலம்

பின்னர் வங்கியில் இருந்து பணத்துடன், தனது மோட்டார் சைக்கிளில் கூட்டேரிப்பட்டு சென்று அங்கிருந்து பஸ் மூலம் சென்னை திருவான்மியூருக்கு சென்று இறங்கியுள்ளார். இதனிடையே தனது உறவினர் ஒருவரின் மருத்துவ செலவுக்காக முகேஷ், தனது கணக்கில் இருந்த ரூ.1½ லட்சத்தை அனுப்பியுள்ளார். அதன்பிறகு திருவான்மியூர் கடற்கரையில் செல்போனை போட்டுவிட்டு கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாட திட்டமிட்டுள்ளார். ஆனால் போலீசார் கண்டுபிடித்து விடுவார்கள் என்று எண்ணி அந்த முடிவை மாற்றிக்கொண்டு கடத்தல் நாடகமாட திட்டம்போட்டார்.

இதற்காக முகேஷ், தன்னை ஒரு கும்பல் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டி தொந்தரவு செய்வதாகவும், அந்த கும்பலை சேர்ந்தவர்கள் தன்னை பணத்துக்காக கடத்திச்சென்று விட்டதாகவும் நாடகமாடி போலீசாரையும், மற்றவர்களையும் நம்ப வைப்பதற்காக ஆடியோவில் பேசி அதனை தனது உறவினருக்கு அனுப்பி வைத்தார்.

அதன்பிறகு முகேஷ், பெங்களூரு சென்று அங்கு தலைமறைவு வாழ்க்கை வாழ எண்ணி புறப்பட தயாரானார். அப்போது, அங்கு தேர்தல் சமயம் என்பதால், இந்த சமயத்தில் அங்கு பணத்துடன் சென்றால் தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி தன்னிடமிருந்து அதிகாரிகள் பணத்தை கைப்பற்றக்கூடும் என்று கருதினார். இதனால் பெங்களூரு செல்லும் முடிவை கைவிட்டார்.

கைது

பின்னர் முகேஷ், வேறொரு செல்போனில் இருந்து தனது நண்பர் ஒருவரிடம் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அவர் மூலமாக மற்றவர்களுக்கும் இந்த தகவல் தெரியவரவே அவர்கள், முகேசை பலமுறை தொடர்புகொண்டுள்ளனர். இதனால் எப்படியாவது போலீசில் சிக்கிவிடுவோம் என்ற பயம் முகேசுக்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக திருவான்மியூரில் இருந்து புறப்பட்டு புதுச்சேரிக்கு செல்ல முடிவெடுத்து விழுப்புரம் வந்து இறங்கியுள்ளார். இவருடைய செல்போன் நெட்வொர்க் மூலம் சைபர்கிரைம் உதவியுடன் தொடர்ந்து கண்காணித்து வந்த தனிப்படை போலீசார், விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் முகேசை மடக்கிப்பிடித்தனர்.

மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து வங்கியில் இருந்து நைசாக பணத்தை திருடிய குற்றத்திற்காக காசாளர் முகேசை போலீசார் கைது செய்தனர்.


Next Story