அறுவடைக்கு தயாராகும் மரவள்ளி கிழங்குகள்
கறம்பக்குடி பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மரவள்ளி கிழங்குகள் தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளன. செடிகள் செழித்து வளர்ந்து உள்ளதால் இந்த ஆண்டு நல்ல மகசூல் கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
கறம்பக்குடி:
மரவள்ளி கிழக்கு
கறம்பக்குடி பகுதியில் காவிரி பாசன பகுதிகளான 12 ஊராட்சிகளை தவிர மற்ற ஊராட்சிகளில் நெல், கரும்பு, வாழை, சோளம் மட்டுமல்லாமல் மரவள்ளிக் கிழங்கு சாகுபடியிலும் இப்பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கறம்பக்குடி அருகே உள்ள அம்புகோவில், ரெகுநாதபுரம், சூரக்காடு, மழையூர், வெள்ளாள விடுதி, மங்களாகோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரவள்ளி கிழங்குகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மரவள்ளி கிழங்கு செடிகள் தற்போது செழித்து வளர்ந்து உள்ளன. தீபாவளி முடிந்தவுடன் அறுவடை பணிகள் தொடங்கி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு பருவ மழை கை கொடுத்ததால் நல்ல மகசூல் கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
15 நாட்களில் அறுவடை
இதுகுறித்து கறம்பக்குடி பகுதியில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கூறுகையில், பராமரிப்பு செலவு குறைவு, தண்ணீர் அதிகம் தேவையில்லை உள்ளிட்ட காரணங்களால் மரவள்ளி கிழங்கு சாகுபடியிலும் ஆர்வம் காட்டி வருகிறோம். உரம் இடுவது, களை பறிப்பது போன்ற பணிகள் நிறைவடைந்து செடிகள் நன்கு பச்சை பசேலென வளர்ந்து உள்ளன. இன்னும் 15 நாட்களில் அறுவடை பணிகள் தொடங்க உள்ளது.
நல்ல விலை கிடைக்கும் என எதிர்பார்ப்பு
கறம்பக்குடி பகுதி மரவள்ளி கிழங்குகளுக்கு சந்தையில் நல்ல மவுசு உள்ளது. இந்த மண்ணின் தன்மைக்கு கிழங்குகள் கொத்துக் கொத்தாக வளர்ந்து நல்ல ருசி நிறைந்ததாக இருக்கும். இதனால் ஜவ்வரிசி பயன்பாடு தவிர வீடுகளில் உணவு பயன்பாட்டிற்கும் மரவள்ளி கிழங்குகள் விற்பனை செய்யப்படுகின்றன.
வியாபாரிகள் மரவள்ளி கிழங்குகளை வாங்கி சரக்கு வேன்களில் கறம்பக்குடி கிழங்குகள் என சொல்லி விற்பனை செய்கின்றனர்.
புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்ட பகுதிகளில் கறம்பக்குடி கிழங்குகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. கொரோனா ஊரடங்கு போன்ற காரணங்களால் கடந்த சில ஆண்டுகளில் மரவள்ளி கிழங்குகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை. இந்த ஆண்டு நல்ல விலை கிடைக்கும் என எதிர்பார்த்து உள்ளோம் என தெரிவித்தனர்.