சாதி, மொழி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் -சீமான் கோரிக்கை
இட ஒதுக்கீடு உரிமையை உறுதிப்படுத்த சாதி, மொழி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் சீமான் கோரிக்கை.
சென்னை,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பீகாரில் சாதி வாரி கணக்கெடுப்பு விரைவில் நடத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. சரியான நேரத்தில் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் இந்த நடவடிக்கையை முன்னெடுத்த அம்மாநில அரசிற்கு பாராட்டுகளை தெரிவிக்கிறேன்.
ஆண்டாண்டு காலமாகப் பிறப்பின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டு, ஒடுக்கப்பட்ட தமிழ்ச்சமூகங்களுக்கான பிரதிநிதித்துவத்தையும், வாய்ப்பையும் அச்சமூகத்தையே அளவீடாகக் கொண்டு கல்வி, வேலைவாய்ப்புகளில் உறுதிப்படுத்துவதே சமூக நன்மையாகும். இத்தகைய இடஒதுக்கீட்டுக்கு எத்தகைய சட்டச்சிக்கலும் ஏற்படாதிருக்க, சாதி வாரிக் கணக்கெடுப்பை உடனடியாக நடத்தி, சான்றுகளோடும், தரவுகளோடும் அதனை நிலைபெறச் செய்ய வேண்டும். அனைத்து தமிழ்ச் சமூகங்களுக்குமான இடஒதுக்கீட்டை மக்கள் தொகைக்கு ஏற்ப பகிர்ந்தளிக்க முன்வர வேண்டும். சாதி வாரிக்கணக்கெடுப்பின் மூலம் சமூகங்களின் மக்கள்தொகையைக் கண்டறிந்து, எண்ணிக்கை விகிதத்திற்கு ஏற்ப அவர்களுக்கான விகிதாச்சாரத்தை வழங்குவதே தகுந்த சட்ட நடவடிக்கையாகும்.
கடந்த தேர்தலில் தி.மு.க.வும் அதனைத் தேர்தல் வாக்குறுதியாக அளித்திருந்தது. ஆகவே, அதனை விரைந்து சாத்தியப்படுத்தி வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைச் சரிவர நிர்மாணிக்க வேண்டும். பீகாரை போன்று சாதி வாரிக்கணக்கெடுப்பை உடனடியாக நடத்திட நடவடிக்கைகள் எடுத்து எல்லா சமூகங்களுக்குமான பிரதிநிதித்துவத்தை மக்கள்தொகைக்கேற்ப சரிசமமாகப் பகிர்ந்தளிக்க முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். இத்தோடு மொழிவாரிக் கணக்கெடுப்பையும் நடத்தி அதன் முடிவையும் முன்வைக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.