பழங்குடியின மாணவர்களுக்கு சாதிச்சான்றிதழ்


பழங்குடியின மாணவர்களுக்கு சாதிச்சான்றிதழ்
x

திருச்சிற்றம்பலம் அருகே வசிக்கும் பழங்குடியின மாணவர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சாதிச்சான்றிதழை வழங்கினார்.

தஞ்சாவூர்
தஞ்சை மாவட்டம், திருச்சிற்றம்பலம் அருகே உள்ள துறவிக்காடு ஊராட்சி புதுப்பட்டினம் ஒன்றாம் நம்பர் கிளை வாய்க்கால் செல்லும் பகுதியில் சுமார் 31 இந்து ஆதியன் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இதேபோன்று மேல ஒட்டங்காடு பகுதியில் அதே வகுப்பை சேர்ந்த சுமார் 18 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இவர்களின் குழந்தைகள் பள்ளிப்படிப்பை தடையின்றி தொடர்வதற்கு வசதியாக சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என நீண்ட நாட்களாக கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனுக்கள் அளித்திருந்தனர். அவர்களின் கோரிக்கை மனுக்களை பரிசீலித்த மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், பழங்குடியின மக்களின் மாணவர்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுத்தார்.

வீடுகளுக்கே சென்று வழங்கினார்

அதற்கான சாதிச்சான்றிதழை துறவிக்காடு மற்றும் மேலஒட்டங்காடு பகுதியில் வசிக்கும் இந்து ஆதியன் பழங்குடியின மக்களின் மாணவ-மாணவிகளுக்கு நேற்று நேரில் சென்று கலெக்டர் வழங்கினார். அதனை பெற்றுக்கொண்ட பழங்குடியின மக்கள் கலெக்டருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

அப்போது பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் பிரபாகர், தாசில்தார் ராமச்சந்திரன், பேராவூரணி ஒன்றிய ஆணையர்கள் தவமணி, குமரவடிவேல், துறவி காடு ஊராட்சி மன்ற தலைவர் கற்புக்கரசி எழுவராஜன், திருச்சிற்றம்பலம் சரக வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உடன் இருந்தனர்.



Next Story