தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் -அன்புமணி ராமதாஸ் பேட்டி


தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் -அன்புமணி ராமதாஸ் பேட்டி
x

பீகார், கர்நாடக மாடல்களை வைத்து தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

அனைத்து இந்திய ஓ.பி.சி. ரெயில்வே ஊழியர்கள் மாநாடு சென்னையை அடுத்த ஆவடியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த மாநாட்டின் முக்கிய கோரிக்கை தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் சாதிவாரி கணக்கெடுப்பு அரசு நடத்த வேண்டும் என்பதாகும். அண்மையில் இணையதள மூலமாக மாநாடு ஒன்றில் கலந்து கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசு இந்திய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றார். நீங்கள் சொன்னதை முதலில் தமிழ்நாட்டில் நடத்துங்கள். இந்திய அளவில் மத்திய அரசை நாம் எல்லாம் சேர்ந்து சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரி வலியுறுத்துவோம்.

பீகார் மாநிலத்தில் முதல்-மந்திரி நிதிஷ்குமார் சாதிவாரி கணக்கெடுப்பை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். பீகார் மாடல், கர்நாடக மாடல்களை வைத்து தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அதற்கு ஏற்ப இட ஒதுக்கீடுகளை வழங்க வேண்டும். அப்போதுதான் உண்மையான சமூக நீதி கிடைக்கும்.

ஆதாரத்தை கொடுக்க வேண்டும்

கவர்னா் பொறுப்பு என்பது அரசியல் சார்பற்ற ஒரு பொறுப்பு. அரசியல் சாசன பொறுப்பு. அவர் நடுநிலையாக செயல்பட வேண்டும். ஆனால் இப்போது இருக்கிற தமிழக கவர்னர் அண்மை காலமாக அவர் சார்ந்த கட்சிக் கொள்கைகளை, கருத்துகளை மற்ற கட்சிகளுக்கு எதிரான கொள்கைகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அது தவறானது, நிச்சயமாக அதை தவிர்க்க வேண்டும்.

ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு வெளிநாட்டில் இருந்து நிதி பெறப்பட்டதாகவும் அதன் மூலம் சில என்.ஜி.ஓ.க்கள் போராட்டம் நடத்தியதாகவும் கவர்னர் ஒரு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். அதற்கான ஆதாரத்தை அவர் கொடுக்க வேண்டும், ஆதாரம் இருந்தால் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

நிலக்கரி சுரங்கங்கள்

தமிழகத்தில் புதிதாக 6 நிலக்கரி சுரங்கங்கள் வர உள்ளன. அதில் சேத்தியாதோப்பு கிழக்கு பகுதி, அரியலூர் மைக்கேல் பட்டி, தஞ்சாவூர் வடசேரி நிலக்கரி சுரங்கங்களை ஏலப்பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறது என்று தான் மத்திய மந்திரி சொல்லி இருக்கிறார். இதற்கு காரணம், இந்த 3 நிலக்கரி சுரங்கங்களையும் 3 முறை ஏலம் விட்டும் யாரும் எடுக்கவில்லை.

அதேநேரத்தில், என்.எல்.சி.யின் 3-வது சுரங்க விரிவாக்கம், வீராணம் புதிய நிலக்கரி சுரங்கம், பாளையங்கோட்டை நிலக்கரி சுரங்கம் ஆகிய 3 நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த 3 புதிய நிலக்கரி சுரங்கத்திற்கு நாங்கள் அனுமதி கொடுக்க மாட்டோம் என்று தமிழக முதல்-அமைச்சர் சட்டமன்றத்தில் வாக்குறுதி கொடுக்க வேண்டும். 6 புதிய நிலக்கரி சுரங்கங்களுக்கும் நாங்கள் அனுமதி கொடுக்க மாட்டோம் என்று முதல்-அமைச்சர் சட்டமன்றத்தில் கூற வேண்டும்.

போராடத் திட்டம்

என்.எல்.சி. நிர்வாகத்தால் கடந்த 66 ஆண்டுகளாக கடலூர் மாவட்டம் சந்தித்துள்ள பாதிப்புகளை ஆராய்வதற்கு சென்னை ஐ.ஐ.டி. மூலம் குழு ஒன்றை அமைத்து, ஆய்வு நடத்த வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கடுமையான போராட்டங்களை நடத்த நாங்கள் திட்டமிட்டு உள்ளோம். சிங்கூர் நந்திகிராம் அளவிற்கு போராட்டம் சென்றால் அதற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story