தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் -கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்


தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் -கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்
x

பீகாரில் வெற்றிகரமாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவது போன்று, தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என முதல்-அமைச்சரிடம் வேண்டுகோள் விடுப்போம் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் அரசியல் விவகாரக்குழு கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாநில துணைத்தலைவர்கள் உ.பலராமன், பொன்.கிருஷ்ணமூர்த்தி, சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், கட்சியின் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், பொதுச் செயலாளர்கள் கே.சிரஞ்சீவி, தளபதி எஸ்.பாஸ்கர், எஸ்.ஏ.வாசு, எம்.பி.க்கள் டாக்டர் செல்லக்குமார், மாணிக் தாகூர், விஜய் வசந்த், எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், பழனி நாடார், எஸ்.டி.ராமச்சந்திரன், துரை சந்திரசேகர், ஹசன் மவுலானா, ஊர்வசி அமிர்தராஜ், முன்னாள் எம்.பி. ஜே.எம்.ஆரூண், இலக்கிய அணி தலைவர் பி.எஸ்.புத்தன், மாநில செயலாளர் அகரம் கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சாதிவாரி கணக்கெடுப்பு

கூட்டத்தின் முடிவில் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

இடஒதுக்கீடு என்பது சமநிலை படுத்தவேண்டும் என்பதற்காக கொண்டு வந்ததுதான். தற்போதைய சூழலில், ஒரு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால், அவரவர்களுக்கு உரிய விகிதாசாரத்தில் அவரவர்கள் பலன் அடைவார்கள் என்று அகில இந்திய அளவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு வெற்றிகரமாக நடக்கிறது. அதேபோன்று தமிழகத்திலும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று விரைவில் தமிழக முதல்-அமைச்சருக்கு நாங்கள் வேண்டுகோள் விடுப்போம்.

தமிழ்நாடு, கேரளா அஞ்சாது

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ரூ.500, ரூ.1,000 நோட்டு செல்லாது என்று சொன்னது போன்றதுதான். இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியம் இல்லாத ஒன்று. மோடி மிரட்டிப் பார்க்கிறார். இந்த மிரட்டலுக்கு தமிழ்நாடு, கேரளா, பிற மாநிலங்கள் அஞ்சாது. அப்படியே மீறி செயல்படுத்தினாலும், இப்போது பெற்றுள்ள வாக்குகளை விட அதிக வாக்குகள் பெற்றுதான் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக வருவார்.

மேலும், நாடு முழுவதும் ஒரு சட்டம் கொண்டு வந்தால் மாநிலங்களில் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள அரசுகளை கேட்காமல் கொண்டு வரமுடியாது.

இந்தியாவில் 50 ஆயிரம் உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களோடு கலந்து ஆலோசிக்க வேண்டும். மோடியும், அமித்ஷாவும் மட்டும் நினைத்து ஒன்றை நடைமுறைப்படுத்த முடியாது. அது தோற்கடிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story