வைக்கோலை சேமித்து வைக்க கால்நடை வளர்ப்போர் ஆர்வம்


வைக்கோலை சேமித்து வைக்க கால்நடை வளர்ப்போர் ஆர்வம்
x
தினத்தந்தி 22 April 2023 12:30 AM IST (Updated: 22 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் வைக்கோலை சேமித்து வைப்பதில் கால்நடை வளர்ப்போர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் விவசாயம், கால்நடை வளர்ப்பை முக்கிய தொழிலாக கொண்ட மாவட்டமாகும். மாவட்டத்தில் பால் உற்பத்திக்காக விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் கறவை மாடுகளை அதிக அளவில் வளர்த்து வருகின்றனர். அதேபோல் ஆடுகள் வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். பொதுவாக கால்நடைகளுக்கு பசுந்தீவனம், உலர் தீவனம் வழங்குவது அவசியமாகும். கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை ஓரளவு பெய்ததால் கால்நடைகளுக்கு பசுந்தீவனத்துக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை. தற்போது கோடைகாலம் தொடங்கியுள்ளதால் புற்கள் உள்ளிட்டவை கருகி வருகின்றன. இதனால் கால்நடை வளர்ப்போர் வைக்கோலை வாங்கி சேமித்து வைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரையில் ஆத்தூர், பழனி, கணக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வைக்கோலை வாங்குவார்கள். ஆனால் தேவைக்கேற்ப இப்பகுதியில் வைக்கோல் கிடைப்பதில்லை. இதனால் திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய பகுதிகளில் இருந்து வைக்கோல் கட்டுகளை கால்நடை வளர்ப்போர் மொத்தமாக வாங்கி வருகின்றனர். தற்போது வைக்கோல் கட்டு ஒன்று ரூ.220-க்கு விற்பனையாகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் அதன் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இதனால் கால்நடை வளர்ப்போர் வைக்கோல் கட்டுகளை மொத்தமாக வாங்கி வந்து, சேமித்து வைக்கின்றனர். மேலும் கால்நடை தீவன தட்டுப்பாட்டை போக்க கால்நடைத்துறை சார்பில் மானிய விலையில் உலர் தீவன கிடங்கு திட்டத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கால்நடை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story