தூத்துக்குடி மாவட்டத்தில் மாட்டு பொங்கல் கொண்டாட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் மாட்டு பொங்கல் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு மாட்டு தொழுவம், கோசாலையில் பொங்கலிட்டு படையல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.
தூத்துக்குடியில் மாட்டுப் பொங்கல் பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கோசலைகள் மற்றும் கிராமங்களில் உள்ள மாட்டு தொழிவங்களில் படையிலிட்டு வழிபாடு நடத்தப்பட்டது.
மாட்டுப் பொங்கல்
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு மக்கள் வீடுகளின் முன்பு பொங்கல் வைத்து, கரும்பு, மஞ்சள் குலை உள்ளிட்டவற்றை சூரியபகவானுக்கு படைத்து வழிபட்டனர். இதனை தொடர்ந்து விவசாயிக்கும், விவசாயத்துக்கும் உறுதுணையாக இருந்து வரும் மாடுகளுக்கு பொங்கல் வைத்து வழிபடக்கூடிய மாட்டுப் பொங்கல் பண்டிகை நேற்று மாட்டுதொழுவங்களில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து பகுதியிலும் கிராமங்களிலுள்ள மாட்டு தொழுவங்கள், கோசாலைகளில் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டது.
அலங்கரித்து..
அந்த வகையில் தூத்துக்குடியில் நாட்டின பசுக்களை வளர்த்து வரும் கோசாலையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டது. இதைமுன்னிட்டு நேற்று காலையில் கோசாலையில் உள்ள அனைத்து மாடுகளையும், குளிப்பாட்டி, மாடுகளின் கொம்புகளுக்கு வர்ணம் பூசி சந்தனம், குங்குமத்தால் அலங்கரித்து மாலை மற்றும் வஸ்திரங்கள் அணிவித்து மரியாதை செலுத்தினர். மாட்டு தொழுவத்துக்கு முன்பு காய்கறி மற்றும் பழ வகைகளை கொண்டு பொங்கலிட்டு படையலிட்டனர். மேலும் மாடுகளுக்கு பழம், கரும்பு, பொங்கல் உள்ளிட்டவைகளை உணவாக வழங்கினார்கள்.
பிரார்த்தனை
விவசாயத்திற்கு மிகவும் உறுதுணையாக இருந்து வரக்கூடிய நாட்டு மாடுகளை முறையாக பாதுகாப்பதின் மூலம் எந்தவிதமான பெரும் தொற்றும் ஏற்படாது எனவும், இந்த மாட்டுப் பொங்கலன்று மாடுகளுக்கு படையலிட்டு அனைத்து மக்களும் சுபிட்சமாக இருக்க வேண்டி பிரார்த்தனை செய்யப்பட்டது என்று மாடு வளர்ப்பவர்கள் தெரிவித்தனர்.