தூத்துக்குடியில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள் கோசாலையில் ஒப்படைக்கப்படும்: மாநகராட்சி கமிஷனர்


தினத்தந்தி 17 Feb 2023 12:15 AM IST (Updated: 17 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள் மாநகராட்சியால் பிடித்து கோசாலையில் ஒப்படைக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ்குமார் எச்சரித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள் மாநகராட்சியால் பிடித்து கோசாலையில் ஒப்படைக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ்குமார் எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கால்நடை

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாகவும், அபாயத்தை உண்டாக்கும் வகையிலும் கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. அந்த கால்நடைகளை அந்தந்த உரிமையாளர்கள், தங்களது சொந்த பொறுப்பில் பாதுகாத்து பராமரிக்க வேண்டும். இது தொடர்பாக தொடர்ச்சியாக அறிவுறுத்தி வருகிறோம். ஆனாலும், தொடர்ந்து கால்நடைகள் போக்குவரத்து மிகுந்த பகுதிகளில் அலைந்து திரிவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு, பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். இதனை ஒழுங்குபடுத்தும் விதமாக அவ்வப்போது மாநகராட்சி சார்பில் கால்நடைகளை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், கோசாலையில் பராமரிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

புகார்

இந்த நிலையில், மாநகரத்தின் பிரதான பகுதிகளில் அலைந்து திரியும் கால்நடைகளால் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுவதால் பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. ஆகையால் கால்நடை வளர்ப்போர் தங்களது சொந்த பொறுப்பில் குறிப்பிட்ட இடத்தில் அடைத்து கால்நடைகளை பராமரிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. தவறும்பட்சத்தில், மாநகர பகுதிகளில் அலைந்து திரியும் கால்நடைகள் மாநகராட்சியால் பிடிக்கப்பட்டு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கோசாலையில் ஒப்படைக்கப்படும். இனி வரும்காலங்களில் கோசாலையில் ஒப்படைக்கப்படும் கால்நடைகள் திரும்ப உரிமையாளரிடம் ஒப்படைக்க மாட்டாது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story