லாரிகளுக்கு இடையே சிக்கியவர் தலை நசுங்கி சாவு
ஹெட்போனில் பாட்டு கேட்டபடி ஸ்டிக்கர் ஒட்டியபோது, 2 லாரிகளுக்கு இடையே சிக்கியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திண்டுக்கல் அருகே உள்ள மாலப்பட்டி அபிராமி நகரை சேர்ந்தவர் தங்கவேல். அவருடைய மகன் கிஷந்த்குமார் (வயது 37). இவர், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் கடை வைத்துள்ளார். நேற்று காலை இவர், திண்டுக்கல் அருகே உள்ள மேற்கு மீனாட்சிநாயக்கன்பட்டி பகுதியில் ஒரு லாரியில் ஸ்டிக்கர் ஒட்டும் பணில் ஈடுபட்டிருந்தார். அவர் செல்போனில், 'ஹெட்போன்' மாட்டி பாட்டு கேட்டபடி வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது, 'ஹாரன்' அடித்தப்படியே டிரைவர் மற்றொரு லாரியை பின்னோக்கி நகர்த்தினார். ஆனால் கிஷந்த்குமார், 'ஹெட்போன்' மாட்டியிருந்ததால் லாரியின் 'ஹாரன்' சத்தம் அவருக்கு கேட்கவில்லை. இதனால் பின்னால் வந்த லாரி, அவர் மீது மோதியது. இதில் 2 லாரிகளுக்கு இடையே அவர் சிக்கி கொண்டார். இந்த விபத்தில் கிஷந்தகுமாரின் தலை நசுங்கியது.
இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து அலறினர். இதனையடுத்து அந்த லாரிைய டிரைவர் நிறுத்தினார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கிஷந்த்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான கிஷந்த்குமாருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.