கடலில் ராட்சத அலையில் சிக்கி வள்ளம் கவிழ்ந்தது
கன்னியாகுமரி அருகே கடலில் ராட்சத அலையில் சிக்கி வள்ளம் கவிழ்ந்ததில் 3 மீனவர்கள் காயமடைந்தனர்.
தென்தாமரைகுளம்:
கன்னியாகுமரி அருகே கடலில் ராட்சத அலையில் சிக்கி வள்ளம் கவிழ்ந்ததில் 3 மீனவர்கள் காயமடைந்தனர்.
மீனவர்கள்
கன்னியாகுமரி அருகே உள்ள கோவளம் மேற்கு தெருவை சேர்ந்தவர் சத்யாகு ராயப்பன் (வயது 46). இவர் சொந்தமாக வள்ளம் வைத்து மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.
இவருடைய வள்ளத்தில் அதே பகுதியை சேர்ந்த ஜோசப் (45), ராஜன் (40), குமார் (25), ஆல்வின் (25) ஆகியோரும் மீன்பிடிக்கச் செல்வது வழக்கம்.
வள்ளம் கவிழ்ந்தது
இந்தநிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் வழக்கம்போல் வள்ளத்தில் சத்யாகு ராயப்பன் உள்பட 5 பேரும் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் கரையில் இருந்து சில கடல் நாட்டிக்கல் மைல் தொலைவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி வள்ளம் கடலுக்குள் கவிழ்ந்தது.
இதில் வளத்தில் இருந்த 5 பேரும் கடலுக்குள் தூக்கி வீசப்பட்டனர். இந்த சம்பவத்தில் ராஜன், குமார், ஆல்வின் ஆகிய 3 பேர் காயமடைந்தனர். சத்யாகு ராயப்பன், ஜோசப் ஆகிய 2 பேரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.
பின்னர் அவர்கள் கவிழ்ந்த வள்ளத்தை இழுத்து கரைக்கு கொண்டு வந்தனர். காயமடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிக்சை பெற்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.