மதுரையில் வாகன சோதனையில் சிக்கியவர்: இலங்கை வாலிபருக்காக போலியாக ஆதார் கார்டு தயாரித்தது அம்பலம்- போலீசார் திடுக்கிடும் தகவல்


போலீசார் வாகன சோதனையில் சிக்கிய இலங்கை வாலிபருக்காக மதுரையில் போலியாக ஆதார் கார்டு தயாரித்து கொடுத்தது பற்றி போலீசார் திடுக்கிடும் தகவலை தெரிவித்தனர்.

மதுரை


போலீசார் வாகன சோதனையில் சிக்கிய இலங்கை வாலிபருக்காக மதுரையில் போலியாக ஆதார் கார்டு தயாரித்து கொடுத்தது பற்றி போலீசார் திடுக்கிடும் தகவலை தெரிவித்தனர்.

புகையிலை பொருட்கள்

மதுரை நகரில் திருட்டு, கடத்தல் உள்ளிட்ட குற்றச்சம்பவங்களை தடுக்க இரவு நேரங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட போலீசாருக்கு, போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார். அதன்படி போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் ஆறுமுகசாமி மேற்பார்வையில் டவுன் உதவி கமிஷனர் செல்வின், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் தலைமையில் தனிப்படை போலீசார் பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரில், பெங்களூருவில் இருந்து புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, காரில் வந்த மதுரை ஹார்விப்பட்டியை சேர்ந்த காசிவிசுவநாதன், கார் டிரைவர் ராஜேஷ் ஆகியோரை போலீசார் பிடித்தனர். பின்னர் அவர்கள் இருவரையும், சுப்பிரமணியபுரம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் அன்புதாசன் விசாரணை நடத்தினார். விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து போலீசார் கூறியதாவது:-

இலங்கை வாலிபர்

பிடிபட்ட ராஜேசின் பேச்சில் சந்தேகம் ஏற்பட்டது. அவரது ஆவணங்களை பரிசோதித்தோம். அவரின் ஆதார் கார்டு, தபால் தந்தி நகரில் உள்ள ஒரு முகவரியை காண்பித்தது. ஆனால், அங்கு நேரில் சென்று விசாரித்தபோது அது போலியாக தயாரிக்கப்பட்ட ஆதார்கார்டு என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இதுசம்பந்தமாக தீவிர விசாரணை நடத்தியதில் ராஜேஷ் இலங்கையை சேர்ந்தவர் என்பதும், அவரது உண்மையான பெயர் சிவராஜ் (வயது 32) என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

அவர், கள்ளத்தோணியில் ராமேசுவரம் வந்து, ராஜேஷ் என்ற பெயரில் திருப்பத்தூரை சேர்ந்த ஏஜெண்டு செல்வம் மூலம் சென்னையில் போலியான முகவரியில் டிரைவிங் லைசென்சு பெற்றுள்ளார். அதன்பின்னர், ரூ.5 லட்சம் செலவு செய்து, போலியான பாஸ்போர்ட் தயாரித்து துபாய் சென்றுள்ளார். அது சுற்றுலா விசா என்பதால் 2 மாதத்தில் அங்கிருந்து மீண்டும் இலங்கை திரும்பி வந்து விட்டார். இருப்பினும் தன்னிடம் ரூ.5 லட்சம் வாங்கி ஏமாற்றியவரை கண்டுபிடிக்க சென்னை வந்தார். ஆனால், முடியவில்லை.

போலி பாஸ்போர்ட்

இதற்கிடையே, கோவையில் தங்கி வேலை செய்தபோது, பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டதாக கூறப்படுகிறது. மீண்டும் போலியான பாஸ்போர்ட் தயாரிப்பதற்காக துபாயில் உள்ள நண்பரிடம் கேட்டபோது, மதுரையை சேர்ந்த காசி விசுவநாதனை தொடர்பு கொள்ள கூறியுள்ளார்.

அதன்படி, மதுரைக்கு வந்து காசிவிசுவநாதனிடம் உதவியாளராக வேலை செய்துள்ளார்.. அதன்பின்னரே, காசி விசுவநாதன், சிவராஜூக்கு போலியான ஆதார் கார்டை தயாரித்து கொடுத்துள்ளார். அதுபோல், மதுரையில் உள்ள போலியான முகவரியை காண்பித்து கடந்த 11-ந்தேதி மதுரையில் டிரைவிங் லைசென்சும் வாங்கி கொடுத்துள்ளார். அவர்கள் இருவரின் செலவிற்கு பணம் தேவைப்பட்டதால், இங்கிருந்து பெங்களூரு சென்று, அங்கிருந்து புகையிலை பொருட்களை கடத்தி மதுரையில் விற்பனை செய்வதற்காக ெகாண்டு வந்த வழியில் போலீசில் சிக்கியுள்ளனர். பின்னர் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

கண்காணிப்பில் உள்ளவர்

இதில், காசி விசுவநாதன் மீது, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் இருந்து தூத்துக்குடிக்கு தப்பி வந்தவர்களுக்கு மதுரையில் அடைக்கலம் கொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் அவரிடம் என்.ஐ.ஏ. எனப்படும் தேசியப் புலனாய்வு முகமையும் விசாரணை நடத்தி கண்காணிப்பில் உள்ளார். மேலும் சில வழக்குகளும் நிலுவையில் உள்ளன. மேலும், பெங்களூருவில் இவர் மீது குண்டர் தடுப்பு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டு இருக்கிறது..

சிவராஜ், தமிழகத்தின் பல மாவட்டங்களில் தலைமறைவாக இருந்துள்ளார். இதனால், வேறு ஏதேனும் சதி கும்பலுக்கும் இவருக்கும் தொடர்பு இருக்குமா என்பது பற்றியும் விசாரித்து வருகிறோம்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.


Next Story