காவிரி- பவானி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு 650 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது 1,500 பேர் 10 முகாம்களில் தங்க வைப்பு


காவிரி- பவானி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு  650 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது  1,500 பேர் 10 முகாம்களில் தங்க வைப்பு
x

காவிரி- பவானி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு

ஈரோடு

காவிரி மற்றும் பவானி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் 650 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1,500 பேர் 10 முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

வெள்ளப்பெருக்கு

கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் பெய்து வரும் மழைகாரணமாக மேட்டூர் மற்றும் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றிலும், பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றிலும் உபரிநீர் திறக்கப்பட்டு உள்ளது. காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கன அடியும், பவானி ஆற்றில் வினாடிக்கு 25 ஆயிரம் கன அடியும் உபரிநீராக திறக்கப்பட்டு உள்ளது. இதன்காரணமாக காவிரி மற்றும் பவானி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நகரமாக உள்ள பவானியில் காவிரி ஆறும், பவானி ஆறும் அங்குள்ள கூடுதுறை பகுதியில் ஒன்றாக கலக்கிறது. இதனால் இங்கு வெள்ள பாதிப்பு அதிகமாக ஏற்பட்டு உள்ளது.

650 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

பவானியில் பவானி ஆற்றங்கரையோரத்தில் உள்ள சோமசுந்தரபுரம், சீனிவாசபுரம், பழைய பஸ் நிலையம், அருகே உள்ள குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள 250-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு அந்தந்த பகுதியில் உள்ள முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இதேபோல் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக காவிரி ஆற்றங்கரையோரத்தில் உள்ள புதிய பஸ் நிலையம் அருகே உள்ள காவிரி நகர், காவேரி வீதி, தினசரி மார்க்கெட் அருகே உள்ள பசுவேஸ்வரர் வீதி, செல்லியாண்டி அம்மன் கோவில் அருகே உள்ள பாலக்கரை மற்றும் பவானி நீதிமன்றம் அருகே உள்ள நேதாஜி நகர் ஆகிய பகுதிகளில் நேற்று மீண்டும் 400-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. உடனே அவர்கள் மீட்கப்பட்டு முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதற்கான மீட்பு பணியில் பேரிடர் தடுப்பு பணியினர் மற்றும் வருவாய்த்துறையினர் ஈடுபட்டனர்.

10 முகாம்களில் தங்க வைப்பு

பவானியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 650-க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்டோர் 10 முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நகராட்சி பணியாளர்கள் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.

காவிரி மற்றும் பவானி ஆகிய 2 ஆறுகளிலும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பவானியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

சத்தியமங்கலம்

அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி உபரிநீர் திறக்கப்பட்டதால் சத்தியமங்கலத்தை அடுத்த புது கொத்துக்காடு பகுதியில் பவானி ஆற்றங்கரையோரம் உள்ள ஒரு விவசாயின் தோட்டத்தில் தண்ணீர் புகுந்தது. அந்த தோட்டத்தில் 4 ஏக்கரில் வாழையும், நூற்றுக்கணக்கான தென்னை மரங்களும் பயிரிடப்பட்டு உள்ளன. தோட்டத்தை வெள்ளம் சூழ்ந்ததால் அதில் பயிரிடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாழைகளும், நூற்றுக்கணக்கான தென்னை மரங்களை சுற்றிலும் தண்ணீர் தேங்கி நின்றது. வெள்ளம் விைரவில் வடியா விட்டால் வாழைகள் முழுவதும் அழுகி நாசமாகி விடும் என்பதால், உரிய இழப்பீடு வழங்க தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட தோட்ட விவசாயி கோரிக்கை விடுத்து உள்ளார்.

இதேபோல் ெகாடுமுடி பகுதியிலும் கடந்த ஒரு வாரமாக பல்வேறு வீடுகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது.


Next Story