சிறுகுடி கிராமத்துக்கு காவிரி குடிநீர் வினியோகம்


சிறுகுடி கிராமத்துக்கு காவிரி குடிநீர் வினியோகம்
x
தினத்தந்தி 23 Feb 2023 12:15 AM IST (Updated: 23 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடலாடி அருகே 30 ஆண்டுக்கு பிறகு சிறுகுடி கிராமத்துக்கு காவிரி குடிநீர் வினியோகிக்கப்பட்டது. இதற்கு நடவடிக்கை எடுத்த அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

ராமநாதபுரம்

சாயல்குடி,

கடலாடி அருகே 30 ஆண்டுக்கு பிறகு சிறுகுடி கிராமத்துக்கு காவிரி குடிநீர் வினியோகிக்கப்பட்டது. இதற்கு நடவடிக்கை எடுத்த அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

30 ஆண்டுகளாக..

கடலாடி அருகே ஏ.புனவாசல் ஊராட்சி சிறுகுடி கிராமத்தில் சுமார் 250-க்கும் மேற்பட்ட விவசாய குடும்பத்தினர் உள்ளனர். இந்த கிராம மக்கள் குடிநீருக்காக ஒரு கிலோமீட்டர் தூரம் சென்று குடங்களில் தலை சுமையாக கொண்டு வந்து தண்ணீரை பயன்படுத்தி வந்தனர். தங்களது கிராமத்திற்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்க வேண்டி கடந்த 30 ஆண்டுகளாக மாவட்ட கலெக்டர், குடிநீர் வடிகால் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் கிராம மக்கள் ஏ.புனவாசல் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் மூலம் முதுகுளத்தூர் சட்டமன்ற அலுவலகத்தில் அலுவலர்கள் சத்தியேந்திரன், டோனி சார்லஸ், ரஞ்சித் மணிகண்டன், ஆகியோர்களிடம் மனு அளிக்கப்பட்டது. அவர்கள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராம தொழில் வாரிய துறை அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் கோரிக்கை விடுத்தனர்.

ரூ.9 லட்சம் நிதி

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அதிகாரிகளுடன் அப்பகுதியில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து சிறுகுடி கிராமத்திற்கு புதிதாக குழாய் அமைத்து கிராமத்திற்கே தண்ணீர் கொண்டு சென்று வழங்க குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கும் ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி ஏ.புனவாசல் ஊராட்சி மூலம் ரூ.9 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. அந்த நிதியில் ஒருவானேந்தல் கிராமத்தில் உள்ள காவிரி கூட்டு குடிநீர் தொட்டியில் இருந்து தேவர்குறிச்சி விலக்கு ரோடு வழியாக சிறுகுடி கிராமத்திற்கு குழாய் அமைக்கப்பட்டது. அந்த குழாய் மூலம் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பி வினியோகம் செய்யப்பட்டது.

மகிழ்ச்சி

30 ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் தங்கள் கிராமத்துக்கு தண்ணீர் வந்ததை பார்த்த கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் வந்து குடங்களில் தண்ணீர் பிடித்து சென்றனர். இது குறித்து அவர்கள் கூறும் போது:-

குடிநீருக்காக நாங்கள் தினமும் ஒரு கிேலா மீட்டர் தூரம் நடந்து சென்று வந்தோம். இப்போது எங்கள் கிராமத்திலேயே காவிரி கூட்டுக்குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுத்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராம தொழில் வாரிய துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும், ஏ.புனவாசல் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரனுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம். காவிரி குடிநீர் எங்கள் கிராமத்துக்கு கிடைக்க உதவிய அனைத்து அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்து ெகாள்கிறோம் என்றனர்.


Next Story