வீணாக கடலில் கலக்கும் காவிரி உபரிநீர்


வீணாக கடலில் கலக்கும் காவிரி உபரிநீர்
x

கடலில் கலக்கும் உபரிநீரை காவிரி, கொள்ளிடத்தில் நீருந்து நிலையம் அமைத்து குளங்களை நிரப்ப வேண்டும் என்று விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி

கடலில் கலக்கும் உபரிநீரை காவிரி, கொள்ளிடத்தில் நீருந்து நிலையம் அமைத்து குளங்களை நிரப்ப வேண்டும் என்று விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 16-ந்தேதி மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதால், அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 1.16 லட்சம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இரண்டு, மூன்று நாட்களில் நீர்வரத்து குறைந்ததால் தண்ணீர் திறப்பும் குறைக்கப்பட்டது.

கடந்த 1-ந்தேதி மீண்டும் மேட்டூர் அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு 2.10 லட்சம் கன அடி தண்ணீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. இதுதவிர பவானி, அமராவதி அணைகளும் நிரம்பியதால் பவானி, அமராவதி ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து காவிரியில் கலந்தது. இதனால் திருச்சி மாவட்டம் முக்கொம்புக்கு கடந்த 15 நாட்களில் மட்டும் சுமார் 150 டி.எம்.சி தண்ணீர் வந்துள்ளது.

அது அப்படியே காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டது. பின்னர் கல்லணையில் இருந்து பாசன கால்வாய்களிலும், கொள்ளிடம் ஆற்றிலும் திறந்துவிடப்பட்டுள்ளது. கொள்ளிடத்தில் திறக்கப்பட்ட தண்ணீரில் (தினமும் சராசரியாக வினாடிக்கு 1 லட்சம் கன அடி நீர்) 80 சதவீதம் வீணாக கடலில் சென்று கலந்து வருகிறது.

தடுக்க நடவடிக்கை

இயற்கையின் வரப்பிரசாதமாக காவிரி, பவானி, அமராவதி ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளநீரை பயன்படுத்த முடியாமல் கடலில் கலப்பதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்காக ஆற்றில் தடுப்பணைகள் கட்டி, நீருந்து நிலையம் அமைத்து அதன் மூலம் உபரிநீரை திருப்பி வறட்சி பகுதியில் பயன்படுத்தினால், நூற்றுக்கணக்கான ஏரி, குளங்கள் நிரம்பும். லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறும். கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறுவார்கள். நாட்டின் பொருளாதாரம் மேம்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நீருந்து நிலையம்

இதுகுறித்து ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் ஒருவர் கூறியதாவது:-

காவிரியில் கர்நாடக அரசு அணைகள் கட்டி உள்ளதை போல் நம்மால் தமிழகத்தில் அணைகளை கட்ட வாய்ப்பு கிடையாது. அதே நேரம் தடுப்பணைகளை அதிகமாக கட்டலாம். அத்துடன், தடுப்பணை கட்டும் பகுதிகளில் ராட்சத நீர்உந்து நிலையங்களை அமைத்து அருகில் உள்ள ஏரி, குளங்களுக்கு உபரிநீரை எடுத்துச்சென்று நிரப்பலாம்.

உதாரணமாக கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகில் உள்ள பெரியகுளம் 400 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் 0.60 டி.எம்.சி. (600 லட்சம் கனஅடி) தண்ணீர் நிரப்ப முடியும். இந்த குளம் நிரம்பினால் 50 கிலோமீட்டர் தொலைவிற்கு குடிநீர் ஆதாரமும், விவசாய நிலங்களில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் நீர்மட்டமும் உயரும். இப்போது காவிரியில் வீணாகச்செல்லும் தண்ணீரை, வெள்ளியணை பெரியகுளம் அருகிலேயே செல்லும் திண்டுக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு பதிக்கப்பட்டுள்ள இரண்டு ராட்சத குழாய்கள் மூலம் ஒருநாள் மட்டும் (24 மணி நேரம்) குளத்திற்கு தண்ணீரை முறையாக திருப்பிவிட்டு குளத்தை நிரப்பலாம். இப்பணியை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமும், பொதுப்பணி துறையும் இணைந்து செயல்படுத்த வேண்டும். இதற்கு சில லட்சங்கள் தான் செலவாகும். இதை ஒரு முன்னோட்டமாக செயல்படுத்தலாம்.

தடுப்பணைகள்

மேலும் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் தடுப்பணைகளை கட்டலாம். இதில் மாயனூர் முதல் முக்கொம்புக்கு இடையே ஒரு தடுப்பணை, முக்கொம்பில் இருந்து கல்லணை இடையே ஒரு தடுப்பணை கட்டி அதில் இருபுறமும் தலா ஒரு நீருந்து நிலையம் அமைக்கலாம். இதுபோல் கொள்ளிடத்தில் அணைக்கரை (கீழணை) அருகே ஒரு நீருந்து நிலையம் அமைக்கலாம்.

இதன்மூலம் எப்போதெல்லாம். காவிரி, கொள்ளிடத்தில் உபரி நீர் வருகிறதோ, அப்போது இந்த நீருந்து நிலையத்தில் இருந்து அருகில் உள்ள குளங்கள், ஏரிகள் மற்றும் வறட்சியான பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் தண்ணீரை கொண்டு சென்று நிரப்ப முடியும். இதன் மூலம் நீர்நிலைகளை சுற்றி உள்ள அனைத்து பகுதியிலும் குடிநீர் ஆதாரமும், விவசாய நிலங்களில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் நீர்மட்டமும் உயரும்.

உபரி நீரை மட்டுமே கொண்டு செல்லும் வகையில், டெல்டா பாசன பகுதிகளுக்கு பாதிப்பு இன்றி இந்த திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். ஏற்கனவே மேட்டூர் அணையில் இருந்து 100 குளங்களை நிரப்பும் வகையில் நீருந்து நிலையம் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டம் கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டால், அந்த பகுதியில் வறட்சி இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story