காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்ட பணிகள் மும்முரம்: நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
கரூர் மாவட்டத்தில் காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு செய்தார்.
புதிய கதவணை கட்டும் பணி
கரூர் மாவட்டம், நஞ்சை புகழூர் கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.389 கோடியில் புதிய கதவணை கட்டும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த கதவணை 0.8 டி.எம்.சி. தண்ணீரை சேமிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் வலது புறம் உள்ள வாங்கல் வாய்க்கால் மூலம் 1458 ஏக்கர் பாசன நிலங்களும், இடதுபுறம் மோகனூர் வாய்க்காலின் மூலம் 2583 ஏக்கர் பாசன நிலங்களும் பாசன வசதி பெறும். இந்த பணிகள் 40 சதவீதத்திற்கும் மேல் முடிவடைந்துள்ளது.
பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
இதேபோல் மாயனூர் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய கதவணை அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், மாயனூர் காவிரி ஆற்றில் இருந்து வெள்ள நீரை திருப்பி விடும் வகையில் புதிதாக கால்வாய் அமைத்து காவிரி, வெள்ளாறு, மணிமுத்தாறு, வைகை, குண்டாறு, இணைப்பு திட்ட பணிகள் கரூர் மாவட்டத்தில் ரூ.171 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து மேற்கண்ட பணிகள் அனைத்தையும் நேற்று தமிழக அரசின் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பணிகளின் தரம், பணிகளின் முன்னேற்றம் மற்றும் பணிகளை முடிக்க வேண்டிய காலம், ஒவ்வொரு பணியிலும் எவ்வாறு தர கட்டுப்பாடுகளுடன் செய்யப்படுகிறது என்பதை சம்பந்தப்பட்ட பொறியாளர்களிடம் கேட்டு அறிந்து பணிகளை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டார்.
பங்கேற்றவர்கள்
ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், நீர்வள ஆதாரத்துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு இணைப்பு திட்ட நிலம் எடுப்பு தனி மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.