சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் மேலும் 2 பேரிடம் தீவிர விசாரணை
சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் மேலும் 2 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவுகளை கலந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாவட்ட கலெக்டர் கவிதாராமு, போலீஸ் சூப்பிரண்டு வந்திதாபாண்டே ஆகியோர் வேங்கைவயல் கிராமத்துக்கு சென்று ஆய்வு நடத்தினர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணையை தொடங்கினார்கள். குடிநீர் தொட்டியில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து முத்துக்காடு ஊராட்சிக்குட்பட்ட வேங்கைவயல், இறையூர் மற்றும் பக்கத்து கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த 46 பேர், பிற சமூகத்தை சேர்ந்த 49 பேரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. ஆனாலும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் 8 பேரை விசாரணைக்காக திருச்சி மத்திய சிறை அருகே உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு அழைத்திருந்தனர்.
அதன்படி 8 பேரும் நேற்று முன்தினம் காலை நேரில் ஆஜராகினர். அவர்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு பால்பாண்டி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து 2-வது நாளாக மேலும் 2 பேர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நேற்று ஆஜராகினர். அவர்களிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.