சி.பி.ஐ. அதிகாரி, சப்-இன்ஸ்பெக்டர் போல் நடித்து கூட்டுறவு பெண் ஊழியரிடம் நகைபறிப்பு
சி.பி.ஐ. அதிகாரி, சப்-இன்ஸ்பெக்டர் போல் நடித்து கூட்டுறவு பெண் ஊழியரிடம் நகையை பறித்துவிட்டு, அவரது இருசக்கர வாகனத்தையும் ஓட்டிச்சென்ற 2 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.
அருப்புக்கோட்டை,
சி.பி.ஐ. அதிகாரி, சப்-இன்ஸ்பெக்டர் போல் நடித்து கூட்டுறவு பெண் ஊழியரிடம் நகையை பறித்துவிட்டு, அவரது இருசக்கர வாகனத்தையும் ஓட்டிச்சென்ற 2 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.
இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கூட்டுறவு சங்க ஊழியர்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் எம்.டி.ஆர். நகரை சேர்ந்தவர் சுகுமார். இவருடைய மனைவி கோகிலா (வயது 34). இவர் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 25-ந் தேதி பணியில் இருந்த கோகிலாவுக்கு போன் செய்த ஒருவர், தன்னை போலீஸ் என கூறி உங்களை ஒரு திருட்டு வழக்கில் விசாரிக்க வேண்டும் என தெரிவித்து இருக்கிறார்.
அதன் பின்னர் 27-ந் தேதி காலை கோகிலா இருசக்கர வாகனத்தில் பணிக்கு சென்று கொண்டிருந்த போது, சொக்கலிங்கபுரம் பாதயாத்திரை பிள்ளையார் கோவில் அருகே பர்தா போட்ட பெண் ஒருவர் கோகிலாவை தடுத்து நிறுத்தினார். பின்னர் அந்த பெண், தன்னை சப்-இன்ஸ்பெக்டர் என கூறியுள்ளார். நகை பறிப்பு வழக்கில் கைதான நபரிடம் உங்களது செல்போன் எண் உள்ளது. எனவே விசாரிக்க வேண்டும். அதற்காக விருதுநகர் போலீஸ் நிலையம் செல்ல வேண்டும் என கூறி இருக்கிறார்.
நகை பறிப்பு
இதை நம்பிய கோகிலா தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அவரை பர்தா அணிந்த பெண்ணும் பின் தொடர்ந்தார். அல்லம்பட்டி விலக்கு அருகே கோகிலாவை தடுத்து நிறுத்திய நபர் ஒருவர், தான் சி.பி.ஐ. அதிகாரி என்றும் உங்களை விசாரணைக்கு அழைத்து செல்கிறேன் எனக்கூறி கோகிலா ஒட்டி வந்த இருசக்கர வாகனத்தை வாங்கி ஓட்டியுள்ளார். அவரின் பின்னால் அமர்ந்து கோகிலா சென்றுள்ளார்.
சிறிது தூரம் சென்றதும் கோகிலா அணிந்திருந்த 4 பவுன் தங்க நகை மற்றும் செல்போனை அந்த நபர் கோகிலாவிடம் இருந்து வாங்கியுள்ளார். பின்னர் அவரை கப்பலூர் டோல்கேட் வரை அழைத்துச் சென்று அங்குள்ள தனியார் உணவகத்தில் இறக்கிவிட்டு அதிகாரியை அழைத்து வருகிறேன் எனக்கூறி அந்தநபர் நகை மற்றும் இருசக்கரவாகனத்துடன் தப்பிச்சென்றுள்ளார்.
போலீசில் புகார்
நீண்ட நேரம் கழித்தும் அந்த நபர் வராததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கோகிலா, அங்கிருந்து பஸ்சில் ஏறி அருப்புக்கோட்டைக்கு வந்தார். பின்னர் நடந்த சம்பவம் குறித்து குறித்து டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து பெண்ணை ஏமாற்றி நகை மற்றும் இருசக்கர வாகனத்தை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
திருட்டு வழக்கில் விசாரிக்க வேண்டும் என்று கூறியதால் கோகிலா பயந்திருக்கிறார். பர்தா போட்ட பெண் தன்னை சப்-இன்ஸ்பெக்டர் பிரியா என்று கூறும் போதே, கொஞ்சம் விழிப்புணர்வுடன் இருந்திருந்தால் அந்த பெண்ணை பிடித்து இருக்கலாம். சி.பி.ஐ. அதிகாரி என்று கூறியவர் தனது இருசக்கர வாகனத்தை ஏன் ஓட்டி செல்ல வேண்டும் என யோசித்து இருந்தால் அவரையும் பிடித்து இருக்கலாம். இருவரும் திட்டமிட்டு கூட்டுறவு பெண் ஊழியரிடம் நகை, இருசக்கர வாகனத்தை பறித்து இருக்கிறார்கள். அவர்கள் சென்ற இடத்தில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகள் கிடைத்து உள்ளன. விரைவில் அவர்களை பிடித்து விடுவோம். பொதுமக்கள் இது போல மோசடி பேர்வழிகளிடம் உஷாராக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.