நாசரேத்தில் பிறந்தநாள் கொண்டாடிய பால் வியாபாரிக்கு கத்திக்குத்து
நாசரேத்தில் பிறந்தநாள் கொண்டாடிய பால் வியாபாரிக்கு கத்திக்குத்திய இரண்டு பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
நாசரேத்:
நாசரேத் - ஞானராஜ் நகர் கோவில் தெருவை சேர்ந்த ஆசீர்வாதம் ஜார்ஜ் மகன் விஜயகுமார் (வயது 37). இவர் சொந்தமாக பால் மாடுகள் வளர்த்து, நாசரேத் மற்றும் கிராமப் பகுதியில் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும், இதே ஊரைச் சேர்ந்த செல்லத்துரை என்பவருக்கும் இடப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று விஜயகுமார் தனது பிறந்தநாளை வீட்டின் முன்பு பந்தல் அமைத்து நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். அப்போது அங்கு செல்லத்துரை, அவருடைய நண்பரான திருவள்ளுவர் காலனியை சேர்ந்த முத்து ஆகியோர் அங்கு வந்துள்ளனர். அந்த 2 பேரும், விஜயகுமாருடன் திடீரென்று தகராறு செய்து, கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனராம். இதில் படுகாயம் அடைந்த விஜயகுமாரை அவரது நண்பர்கள் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி வழக்குப்பதிவு செய்து செல்லத்துரை, முத்து ஆகிய 2 பேரையும் தேடி வருகின்றார்.